கர்நாடக மாநிலத்தின் மைசூரு தொகுதியின் எம்.பி-யாக இருப்பவர்தான் பிரதாப் சிம்ஹா. பாஜவை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் பத்திரிகையாளராக இருந்தார். அப்போது கடந்த 2008-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்து ஒரு புத்தகத்தை வெளியிட்டார். பிறகு 2014-ம் ஆண்டு பா.ஜ.கவில் இணைந்த இவருக்கு, உடனடியாக பா.ஜ.க தலைமை இளைஞர் பிரிவு தலைவர் பதவியை வழங்கப்பட்டது. .
அப்போது (2014-ம் ஆண்டு) நடைபெற்ற மக்களவை தேர்தலில் மைசூர் தொகுதியில் போட்டியிட்டு 3200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சிம்ஹாவின் தற்போதைய சொத்து: ரூ.1,87,23,762, மொத்த கடன்கள்: ரூ.65,86,698 என்று அறிக்கை ஒன்று கூறுகிறது. தொடர்ந்து 2019-ல் அதே தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்று தற்போதும் எம்.பியாக உள்ளார்.
இவர் அடிக்கடி காங்கிரஸ் குறித்து அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசி வந்துள்ளார். இந்த சூழலில் ஹுன்சூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பிரதாப் சிம்ஹா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், கர்நாடகத்தில் தற்போது ஆட்சியை பிடித்திருக்கும் காங்கிரஸ் கட்சியை குறித்து அவதூறாக பேசியிருந்தார்.
மேலும் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா குறித்தும் அவதூறாக பேசியதோடு, 'சோமாறி சித்தா' என்று விமர்சித்திருந்தார். இவரது இந்த பேச்சு காங்கிரஸ் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், பலரும் இவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதோடு பிரதாப் சிம்ஹாவின் அலுவலகம் முன்பு நேற்று காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து பாஜக எம்.பி சிம்ஹா மீது மைசூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் விஜயகுமார் போலீசில் புகார் அளித்தார். அதோடு முதல்வர் குறித்து அவதூறு போலி செய்தியை பரப்புவதாகவும், இந்து - முஸ்லீம் மக்களிடையே பிரிவினையை உண்டாக்குவதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் சிம்ஹா மீது போலீசார் FIR பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், மக்களவையில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய நபர்களுக்கு, விசிட்டர் பாஸ் கொடுத்தது இதே பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹா என்பது கூடுதல் தகவல்.