இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் இலங்கைக்குச் சென்று 200 ஆண்டுகள் (1823 - 2023) ஆவதை நினைவுகூரும் வகையிலும், அவர்கள் இலங்கைக்கு ஆற்றிய சேவைகளையும், இலங்கையின் பொருளாதாரத்துக்கு வழங்கிய பங்களிப்பைப் பாராட்டியும் நாம் 200' என்ற தலைப்பிலான தேசிய நிகழ்வு கடந்த 3-ம் தேதி நடைபெற்றது.
இலங்கை மத்திய அரசாங்கத்தின் பங்களிப்புடன் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமானால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி வாயிலாக வாழ்த்துரை வழங்கினார். ஆனால், முதலமைச்சரின் காணொளி உரையை ஒளிபரப்ப ஒன்றிய அரசு தடை விதித்துள்ளதாக இந்து நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது.இதையடுத்து ஒன்றிய அரசின் இந்த செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில், தமிழக முதல்வரின் உரையை புறந்தள்ளியமை அநாகரிக - கத்துக்குட்டியான செயலாகும் என இலங்கையின் தமிழன் இதழ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த செய்தி தாளின் தலையங்கத்தில், ”இலங்கைக்கு இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் வருகை தந்து 200 வருடங்கள் நிறைவை நினைவுகூருமுகமாக கடந்தவாரம் கொழும்பில் நடைபெற்ற 'நாம் 200* நிகழ்வில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் காணொளிச் செய்தி ஒளிபரப்பப்படாதமை மலையகத் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
மலையகத் தமிழ் மக்களின் மூதாதையர்கள் தென்னிந்தியாவில் இருந்து குறிப்பாக, தமிழ்நாட்டில் இருந்தே வந்தவர்கள். மலையக மக்களுடன் தொப்புள்கொடி உறவைக்கொண்ட அந்த மாநில மக்களும் அவர்களின் அரசாங்கங்களும் காலங்காலமாக மலையக மக்களின் நலன்களில் மிகுந்த அக்கறை காட்டி வந்திருக்கிறார்கள். அதனால் தமிழ்நாடு முதலமைச்சரின் செய்திக்கு ஒரு பிரத்தியேக முக்கியத்துவம் இருந்தது. ஊடகங்கள் மூலமாகப் பகிரப்பட்ட முதலமைச்சரின் செய்தியில் அவர் இந்த தொப்புள்கொடி உறவு குறித்து குறிப்பிட்டிருக்கிறார்.
அத்தகைய சூழ்நிலையில் இந்திய மத்திய அரசாங்கத்திடமிருந்து வந்ததாகக் கூறப்படும் ஆட்சேபத்தையடுத்து முதலமைச்சர் ஸ்டாலினின் காணொளிச் செய்தி "நாம் 200' நிகழ்வில் ஒளிபரப்பப்படாதமை மலையக மக்களின் விவகாரங்களில் இந்தியாவில் உள்ள கட்சி அரசியல் வேறுபாடுகளைப் பிரதிபலிக்கும் வகையிலான அர்தமுறைகள் தவிர்க்கப்பட்டிருக்கவேண்டும் என்பதே மலையக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'நாம் 200' நிகழ்வில் இந்தியாவில் இருந்து நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் எம்.பி. க்ஷி தரூர், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டசபை உறுப்பினர் பொன். ஜெயசீலன், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் ராம் மாதவ் மற்றும் தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா தலைவர் கே. அண்ணாமலை ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இ.தொ.கா. பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளையடுத்தே தனது செய்தியை அனுப்பியதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். முதலமைச்சர் ஸ்டாலினின் செய்தி ஒளிபரப்பப்படாத விவகாரம் குறித்துசென்னையில் இருந்து வெளியாகும் இந்தியாவின் முக்கியமான தேசிய ஆங்கில தினசரிகளில் ஒன்றான தி இந்து வில் கடந்த சனிக்கிழமை வெளியான செய்தி அந்த விவகாரத்தின் பின்புலத்தை விளக்குவதாக அமைந்திருந்தது.
முதலமைச்சர் ஸ்டாலினின் காணொளி மூலமான செய்தி இறுதி நேரத்திலேயே 'நாம் 200' நிகழ்வின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டமை தொடர்பாக இந்திய அரசாங்கத்திடம் இருந்து வந்ததாகக் கூறப்படும் ஆட்சேபத்தின் விளைவாகவே அந்த காணொளிச் செய்தி ஒளிபரப்பப்படவில்லை. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார்.ஆனால், நிகழ்வின் ஏற்பாட்டாளர்களினால் முதலமைச்சரின் கானொளிச்செய்தி உள்ளூர் ஊடகங்களில் பகிரப்பட்டது. தமிழ்நாடு அரசின் தகவல் மற்றும் பொதுத்தொடர்பு இலாகாவினால் அந்தச் செய்தி அறிக்கை வடிவில் வெளியிடப்பட்டது.
இந்திய நிதியமைச்சர் நிகழ்வின் பிரதம விருந்தினர் என்பதால் நிகழ்ச்சி நிரலைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டிய தேவை புதுடில்லிக்கு ஏற்பட்டது. நிகழ்வு தொடங்குவதற்கு இரு மணித்தியாலங்கள் முன்னதாகவே ஸ்டாலினின் காணொளிப்பதிவு வந்துசேர்ந்ததால் அதை நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பதற்கு அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டது என்று கொழும்பு உத்தியோகபூர்வ வட்டாரம் ஒன்று கூறியது.
தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னாசு நிகழ்வுக்கு அழைக்கப்பட்டதாகவும் அவர் இலங்கைக்கு செல்வதற்கான அங்கீகாரத்தை முதலமைச்சர் வழங்கியதாகவும் ஆனால், நிகழ்வுக்கு முதல்நாள் வரை மத்திய அரசின் அனுமதி வந்துசேரவில்லை என்றும் இந்த விவகாரங்கள் குறித்து நன்கு தகவல் தெரிந்த அரசாங்க வட்டாரம் சென்னையில் கூறியது. மறுநாள் காலை கொழும்பில் நிகழ்வு தொடங்கவிருந்த நிலையில், மத்திய அரசின் அனுமதி முதல்நாள் பின்னிரவில் கிடைக்கப்பெற்றது. அந்த நேரமாவில் தங்கம் தென்னாசுவின் கொழும்பு பயணத்துக்கான விமானச்சீட்டு இரத்துச்செய்யப்பட்டு விட்டது. மத்திய அரசின் அனுமதி கிடைக்கும் சாத்தியமில்லை என்று தோன்றியதாலேயே அவ்வாறு செய்யப்பட்டதாகவும்
கூறப்பட்டது. இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் நிகழ்வு தினத்தன்றே செய்தியொன்றைத் தருமாறு முதலமைச்சரிடம் வேண்டிக்கொண்டதாக இன்னொரு வட்டாரம் கூறியது. அவரின் செய்தி ஒளிப்பதிவு செய்யப்பட்ட காணொளி அனுப்பிவைக்கப்பட்டது. ஏற்பாட்டாளர்கள் அதை உள்ளூர் இலத்திரனியல் ஊடகங்களுடன் பகிர்ந்துகொண்டார்கள்.
முதலமைச்சரின் செய்தி நிகழ்வில் ஏன் ஒளிபரப்பப்படவில்லை என்று கேட்டதற்கு இலங்கை அதிகாரிகள் பதில் கூற மறுத்துவிட்டார்கள். ஆனால் முதலமைச்சரின் செய்தி நிகழ்வின் நிகழ்ச்சி நிரலில் இறுதி நிமிடத்தில் சேர்க்கப்பட்டதை இந்திய அரசாங்கம் ஆட்சேபித்ததாகவும் மாற்றியமைக்கப்பட்ட நிகழ்ச்சிநிரலை புதுடில்லி அங்கீகரிக்கவில்லை என்பதால் ஏற்பாட்டளர்களினால் ஸ்டாலினின் காணொளியை ஒளிபரப்புச் செய்ய முடியாமல் போய்விட்டது என்றும் பிறிதொரு தகவல் கூறுகிறது.
'நாம் 200 நிகழ்வுக்கான இந்தக் காணொளி தமிழக முதலமைச்சர் பலவந்தமாக அனுப்பியதல்ல. இங்கே நிகழ்வு ஏற்பாட்டாளர்களின் வேண்டுகோளின்படியே அவர் அதனை அனுப்பியதால் அதற்குஅளிக்கப்படவேண்டிய முக்கியத்துவம் அறிந்திருக்கப்படவேண்டும். தமிழக அரசியல் தொடர்பில் பல விமர்சனங்கள் இருந்தாலும் இந்தியாவின் பிரதான அரசியல் கட்சி என்பதற்கப்பால் இந்திய அரசியலிலும் தமிழக அரசியலிலும் தவிர்க்கமுடியாத கட்சி. அப்பேர்ப்பட்ட கட்சியொன்றை இந்திய உள்ளக அரசியல் முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தவிர்த்திருப்பது நாகரிகமான விடயமல்ல.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட கடந்த காலங்களில் யாருமே கோரிக்கை விடுக்காமல் இலங்கைக்கு உதவி செய்திருந்தார் தமிழக முதல்வர் .அப்போதும் தமிழக முதல்வரின் பெயரை மறைத்துவிட்டு இந்திய மத்திய அரசின் உதவியாக அதனைக் காட்ட நடவடிக்கைகள் இங்கே எடுக்கப்பட்டிருந்தன. அதனையும் பொறுப்புள்ள பத்திரிகையாக நாங்கள் அப்போது கட்டிக்காட்டியிருந்தோம்.
அப்படியான பின்னணியில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தமிழக முதல்வரின் காணொளி ஒளிபரப்பப்படவில்லை என்றால் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சில நிகழ்வுகளில் நேரடிக் காட்சிகள் அந்த நிகழ்வில் எவ்வாறு ஒளிபரப்பாகின?அப்படியே தொழில்நுட்பக் கோளாறென்றாலும் காணொளியை ஒளிபரப்பாமல் அதன் சாராம்சத்தை மேடையில் கூறியிருக்கலாம் அல்லவா? அப்படியே அல்லாதபட்சத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தமிழக முதல்வரின் உரை இடம்பெறவில்லை என்றுதானும் அறிவித்திருக்கலாம். இவை ஒன்றுமே நடக்கவில்லை.
பா.ஜ.கவின் அரசின் முக்கிய அமைச்சர் வந்த இடத்தில் தமிழக பா.ஜ.க. தலைமை கலந்துகொண்டிருந்த நிகழ்வில் அவர்களின் அரசியல் எதிரியான தி.மு.கவின் முதலமைச்சருக்குரிய இடம் மறுக்கப்பட்டமையை பா.ஜ.க. அரசியலை இங்கு புகுத்தியதால் வந்த விளைவு என்று கருத வேண்டியுள்ளது. பாரதிய ஜனதாவுடன் இலங்கைத் தொழிலால்"காங்கிரஸுக்குள்ள உறவு வர்த்தக அல்லது இதர காரணங்களின் அடிப்படையிலானதாக இருக்கலாம். அது எதுவாக இருந்தாலும், தமிழக முதல்வரின் உரையை புறந்தள்ளியமை அநாகரிக - கத்துக்குட்டியான செயலாகும்” என்று கூறப்பட்டுள்ளது.