மோடி அரசின் 9 ஆண்டுகளில் ரூ.25 கோடிக்கு வாராக் கடன் வழங்கப்பட்டுள்ள நிலையில் வெறும் ரூ.2.5 கோடிதான் வசூல் ஆகி இருக்கிறது என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் புள்ளி விவரத்துடன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
எதற்கெடுத்தாலும் நேருவில் துவங்கி மன்மோகன் சிங் மீதே பழி போடும் நரேந்திர மோடி அரசின் முகமூடி கிழிந்து தொங்குகிறது. மன்மோகன் சிங் கால 10 ஆண்டுகளில் வராக்கடன் ஆன தொகை 17 மாதங்களில் மோடி ஆட்சியில் ஸ்வாஹா.
மன்மோகன் சிங் காலத்தில் ஆண்டு சராசரி வராக்கடன் 34192 கோடி... மோடி ஆட்சியில் ஆண்டுக்கு 2.77 லட்சம் கோடி அபகரிப்பு. மன்மோகன் சிங் 10 ஆண்டு ஆட்சி காலத்தில் மொத்த வராக்கடன் 3.76 லட்சம் கோடி... மோடி ஆட்சியில் 24.95 லட்சம் கோடி. நிதியமைச்சர் வராக்கடன் என்றாலே நீண்ட வகுப்பு எடுப்பார்.
வராக்கடன் என்றால் வஜா கடன் அல்ல என்று... வராக்கடன் என்று கணக்குகளில் காண்பித்த பின்னரும் வசூல் செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று.
25 லட்சம் வராக்கடன் ஆகி இருக்கும் 9 ஆண்டுகளில் அவற்றில் வசூல் ஆகி இருப்பது எவ்வளவு தெரியுமா? வெறும் 2.5 லட்சம் கோடி. 10 சதவீதம்தான். பெரும் கார்ப்பரேட்டுகள் வைத்துள்ள பாக்கியே இதில் பெரும் பகுதி. அவர்களின் பெயர்களை வெளியிடு என்றால் ரிசர்வ் வங்கி சொல்கிறது, அது பரம ரகசியம். யாருடைய பணம் இது? இந்தியா முழுவதும் அரும் பாடுபட்டு, தமது பெரும் உழைப்பை செலுத்தி சாதாரண நடுத்தர மக்கள் சேமித்து வைத்திருக்கிற வியர்வை. ரத்தம். மோடி அரசே!
மக்களுக்கு சொல்... யார் யார் வராக்கடன் வைத்திருக்கிறார்கள். யார் யாருக்கு "ஹேர் கட்" என்ற பெயரில் வஜா செய்துள்ளீர்கள்? இவை எல்லாம் பரம ரகசியம் என சட்டம் சொல்கிறது என்றால் சட்டத்தை திருத்துங்கள். அம்பானி அதானி களுக்காக உங்கள் பேனா ஆயிரம் திருத்தம் செய்யுமென்றால் அப்பாவி மக்களின் சேமிப்புகளை பாதுகாக்க உங்கள் பேனா அசையாதா?
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.