இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பா.ஜ.க எம்.பியாகவும் செயல்பட்டு வருகிறார். இவர் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமைகளைச் செய்வதாகவும், குறைந்தது 10, 12 வீராங்கனைகளுக்கு மேல் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெண் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி போலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்யவில்லை. அதன்பின்னர் மே 28ம் தேதி புதிய நாடாளுமன்ற திறக்கப்பட்ட நிலையில், அதனை அதனை முற்றுகையிட்டு மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது அங்கிருந்த போலிஸார் மல்யுத்த வீரர்களை தடுத்து தரதரவென இழுத்து சென்று கைது செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீசாரின் விசாரணையில், பிரிஜ் பூஷன் சிங் பாலியல் துன்புறுத்தல், துஷ்பிரயோகம் மற்றும் பின்தொடர்தல் போன்ற குற்றங்களுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டியவர் என குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தற்போது பிரிஜ் பூஷன் மீதான பாலியல் புகார் விவகாரத்தில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மல்யுத்த வீராங்கனைகளை பிரிஜ் பூஷண் பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றதாக டெல்லி போலீஸார் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் அவர் குற்றம் செய்தது உறுதியாகியுள்ளது.
அதே நேரம், இதன் காரணமாக பாஜக எம்.பி பிரிஜ் பூஷனுக்கு அடுத்த தேர்தலில் பாஜக சார்பில் சீட் வழங்கப்படாது எனக் கூறப்பட்டது. இது குறித்து செய்தியாளர்கள் பிரிஜ் பூசனிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு "எனது டிக்கெட்டை (தேர்தல் சீட்) யார் ரத்து செய்யப் போகிறார்கள்" என்று அவர் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன் மூலம் பாஜக எம்பி பிரிஜ் பூஷனை கட்சி மேலிடம் இதுவரை கண்டிக்கவில்லை என்பதும், அடுத்த முறையும் அவருக்கு தேர்தலில் சீட் வழங்கப்படும் என பாஜக கூறியதாகவே அவரின் இந்த கருத்து அமைந்துள்ளது. பாஜகவின் இந்த செயலை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்