நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கி 22-ம் தேதியோடு முடிவடைந்தது. புதிய நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடர் நடந்தது. இந்த சூழலில் நேற்று முன்தினம் நடைபெற்ற மக்களவை கூட்டத்தொடரில் சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு தெரிவித்து விவாதம் நடைபெற்றது.
அப்போது இதில் அனைத்து கட்சி எம்.பிக்களும் பாராட்டு தெரிவித்து உரையாற்றினர். அப்போது பா.ஜ.க எம்.பி ரமேஷ் பிதுரி, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலியின் மதத்தை குறிப்பிட்டு பேசினார். அப்போது அவையிலிருந்த மூத்த பா.ஜ.க தலைவர்கள் யாரும் ரமேஷ் பிதுரியின் பேச்சுக்கு கண்டனம் கூட தெரிவிக்காமல் அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.
இதையடுத்து ரமேஷ் பிதுரி பேச்சுக்குக் காங்கிரஸ், தி.மு.க, சி.பி.எம் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். ராகுல் காந்தி எம்.பி டேனிஷ் அலியை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
இந்நிலையில், பா.ஜ.க எம்.பி ரமேஷ் பிதுரியின் பேச்சுக்குக் கவிப்பேரரசு வைரமுத்துவும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது x சமூகவலைதள பதிவில்,
ஒரு
நாற்சந்திப் பேச்சாளருக்கும்
நாடாளுமன்ற உறுப்பினருக்கும்
சொல்லாட்சியில்
வேறுபாடு இருக்கிறது
நாடாளுமன்றம் என்பது
பளபளப்பான
கற்களால் கட்டப்பட்ட
சொற்களின் குப்பைத்தொட்டியல்ல
நாட்டின் உரிமைக்குரலும்
பண்பாட்டின் பெருமைக்குரலும்
தெறித்துக் கிளம்பும் திருத்தலம்
அவையல் கிளவிகளை
எவர் மொழிந்தாலும்
எவர்மீது பொழிந்தாலும்
அவரை அவைத்தலைவர்
ஒறுத்து ஒதுக்க வேண்டும்
நாடு உங்களை கவனிக்கிறது;
நாட்டை உலகம் கவனிக்கிறது" என தெரிவித்துள்ளார்.