அரசியல்

"பதவியே போனாலும் நீட்டுக்கு எதிராக குரல் கொடுப்பேன்": நீட் எதிர்ப்பு போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் உறுதி

அமைச்சர் பதவியே போனாலும், நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுப்பேன் என இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

"பதவியே போனாலும் நீட்டுக்கு எதிராக குரல் கொடுப்பேன்": நீட் எதிர்ப்பு போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் உறுதி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மருத்துவ படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு - ‘நீட்’ தமிழ்நாட்டில் எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியில் (2017 ஆம் ஆண்டு) நுழைந்தது. இந்த நீட் தேர்வினால் ஏழை, எளிய மாணவர்கள் தங்கள் மருத்துவ கனவை துறக்க வேண்டியது இருக்கிறது. அன்றிலிருந்து இதுவரை 23 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

இதனிடையே நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், பொறுப்பற்ற ஆளுநரையும் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும், ஆகஸ்ட் 20 அன்று மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரத அறப்போர் நடைபெறும் என தி.மு.கழக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி கூட்டறிக்கை வெளியிட்டது.

அதன்படி இன்று தமிழ்நாடு முழுவதும் திமுக அணிகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கழக பொதுச்செயலாளர் துரை முருகன், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவர் அணிச் செயலாளர் மருத்துவர் எழிலன், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.

"பதவியே போனாலும் நீட்டுக்கு எதிராக குரல் கொடுப்பேன்": நீட் எதிர்ப்பு போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் உறுதி

இந்த போராட்டத்தில் அமைச்சர் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், " நாம் தண்ணீர் கூட குடிக்காமல் இருக்கும் இந்த உண்ணாவிரதப்போராட்டம் பெரிய வலி இல்லை. நீட் தேர்வால் 23 உயிர்களை இழந்ததுதான் பெரிய வலி. இந்த 23 உயிர்களும் தற்கொலை செய்துக்கொண்டதாக கூறுகிறார்கள். ஆனால், இது தற்கொலை அல்ல; கொலை. இன்று நடைபெறும் போராட்டத்தில் இளைஞர் அணி செயலாளராக கலந்துகொள்ளவில்லை. அமைச்சராக கலந்துகொள்ளவில்லை. ஒரு சக மனிதனாக கலந்துக்கொண்டுள்ளேன். உயிரிழந்த 23 மாணவர்களின் அண்ணாக கலந்துக்கொண்டுள்ளேன்.

நீட் போராட்ட அறிவிப்பு வெளியான போது, என்னை கலந்துகொள்ளக் கூடாது, சட்டச்சிக்கல் வரும் என்று சொன்னார்கள். அதிமுகவினர் வழக்குகூட போட்டார்கள். அமைச்சர் பதவியே போனாலும், நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுப்பேன் என இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளேன். நான் சவால் விடுகிறேன். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தைரியம் இருந்தால், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் நில்லுங்கள். அப்போது தெரியும் தமிழ்நாட்டு மக்கள் யார் என்று. நிச்சயம் மக்கள் திருப்பி அடிப்பார்கள்!

"பதவியே போனாலும் நீட்டுக்கு எதிராக குரல் கொடுப்பேன்": நீட் எதிர்ப்பு போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் உறுதி

நீட் தேர்வுக்கு எதிரான இந்த போராட்டம் தேவையற்றது என பாஜகவினர் சொல்லுகிறார்கள். என்னைக் கேட்டால் தமிழ்நாட்டிற்கு பாஜகவே தேவையற்றதுதான். பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததாலேயே மாணவர்கள் உயிரிழந்ததாக கூறுகிறார்கள். அனிதாவின் பொதுத்தேர்வு மதிப்பெண் என்னவென்று தெரியுமா? மாணவர்கள் உயிரிழந்தது நீட் தேர்வினால் மட்டுமே! வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை ஓட ஓட விரட்டுவதே நீட் ரகசியம். இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைப்போம். சகோதரர் ராகுல் காந்தி நீட் தேர்வில் இருந்து விலக்களிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார். அந்த வாக்குறுதி நிச்சயம் நிறைவேறும்!

மதுரையில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டத்தில் நீட் தேர்வை ரத்துச் செய்யக்கோரி ஒரு தீர்மானம் நிறைவேற்ற முடியுமா? நீட் தேர்வுக்கு எதிராக திமுகவோடு சேர்ந்து போராட அதிமுக தயாரா? பாஜகவோடு சேர்ந்த அதிமுகவையும் மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்ற நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம் மட்டுமே. கழக தலைவரிடம் ஒப்புதல் பெற்று அடுத்த போராட்டத்தை டெல்லியில் நடத்துவோம்" என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories