மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தினந்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. CAA போன்ற கொடூர சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
இது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் மத உணர்வுகளைத் தூண்டி இந்துத்வ கும்பல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. அதிலும், பல மசூதிகள் முன்பு கோவிலாக இருந்தது எனவும், ஆகவே அதை இடிக்கவேண்டும் எனவும் பாஜக மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள் பகிரங்கமாக கூறிவருகின்றனர்.
அந்த வகையில் இந்துத்துவ கும்பலால் உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவின் பல பகுதிகளில் பெரும் வன்முறை நடந்தது. மேலும், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் தற்போது நீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப ராமர் கோவில் அமைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், உத்தரப் பிரதேசம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி இருந்த இடத்தில் முன்பு கோவில் இருந்ததாகவும், இதனால் அதை பிடிக்கவேண்டும் என்றும் சில இந்துத்துவ கும்பல் தொடர்ந்து கூறி வருகிறது. இது தொடர்பாக நான்கு பெண்கள் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் அங்கு தொல்லியல் துறை ஆய்வு நடத்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து இது குறித்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகும் படி அறிவுறுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில், உள்ள ஞானவாபி மசூதி கோயிலின் மீது கட்டப்பட்டதா என்பதை அறிய இந்தியத் தொல்லியல் துறை தனது ஆய்வைத் தொடரும் என்றும் இந்த ஆய்வு அவசியமான ஒன்று என்றும் தற்போது தீர்ப்பு வெளிவந்துள்ளது. இந்த தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.