மணிப்பூரில் பழங்குடி இன பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றே தீர வேண்டும் என்று 'தினகரன்' நாளேடு தலையங்கம் எழுதியுள்ளது.
அது வருமாறு:-
மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ், குக்கி இரு சமூகத்தினர் இடையே மோதல் வெடித்து அது கலவரமாக மாறியது. இதனால் அம்மாநிலத்தில் வன்முறை கட்டவிழ்க்கப்பட்டு தலைவிரித்தாடி வருகிறது. ஒன்றிய அரசு ராணுவத்தை பாதுகாப்புக்கு அனுப்பியும் அமைதிக்குழுவை ஏற்படுத் தியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்மாநிலத்தில் முகாமிட்டு பேச்சு வார்த்தை நடத்திய பிறகும் கலவரங்கள் குறைந்ததாக தெரியவில்லை. மணிப்பூர் பற்றி எரியும் போது அதுகுறித்து ஒரு வார்த்தைகூட பேசாமல் பிரதமர் மோடி கர்நாடக மாநில தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதற்கு காங்கிரஸ் முன்னாள் தலை வர் ராகுல்காந்தி உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் தான் பழங் குடியின பெண்கள் இரு வரை மெய்டீஸ் சமூகத்தி னர் நிர்வாணப்படுத்தி சாலையில் ஊர்வலமாக அழைத்து செல்வது போன்று சமூகவலைதளங்களில் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் நடந்த கொடூரத்தின் உச்சமாக கருதப்படும் இச்சம்பவம் கடந்த மே மாதம் நடந்த பேரணியின் போது அரங்கேறியுள்ளது. இதில் இரு பெண்களையும் வயல் வெளியில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்து துன்புறுத்தியுள்ளனர். இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்துக்கு உச்சநீதிமன்றம் உள்பட காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனத்தை பதிவு செய்துள்ளன. மணிப்பூர் கலவரம் குறித்து வாய் திறக்காத பிரதமர் மோடி முதன்முறையாக கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
மணிப்பூரில் நடக்கும் கலவரங்கள் குறித்து வெளியே பரவாமல் தடுக்க ஒன்றிய பாஜ அரசு அம்மாநிலத்தில் இணைய சேவையை துண் டித்தது. இருந்தாலும் விளையாட்டு வீராங்கனை, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆகியோர் இணையதளத்தில் வீடியோவை வெளியிட்டு மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த உதவவேண்டும் என்று கதறி கெஞ்சினர். உண்மை நிலவரத்தை எப்போதும் மறைக்கமுடியாது என்பது போன்று தற்போது பழங்குடியின பெண்கள் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்குவந்துள்ளது.
இந்த கொடுமைக்கு ஒன்றிய அரசுபொறுப் பேற்றே தீர வேண்டும். பாஜ ஆளும் மாநிலங்களில் உள்ள பிரச்னைகள் மற்றும் ஒன்றிய பாஜ அரசின் விரோத மக்கள் திட்டங்களை எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கும் போதெல்லாம் அவர்களை அடக்குவதற்காகவும், மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவும் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறையை ஏவி பழிவாங்கும் நடவடிக்கையில்தான் ஒன்றிய அரசு கவனம் செலுத்திவருகிறது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜ எம்பியுமான பிரிட்ஜ் பூஷனுக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் கூறி டெல்லியில் பல நாட்கள் போராட்டம் நடத்தியும் ஒன்றிய அரசு கண்டுகொள்ளவே இல்லை.
அதே போன்று தற்போது மகாராஷ்டிர மாநில பாஜ துணைதலைவர் சோமையாவின் ஆபாச வீடியோ மராத்தி செய்தி சேனல்களில் வெளியாகி பரபரப்பாகியுள்ளது. இதில் பல அரசு பெண் அதிகாரிகளையும் அவர் மிரட்டி பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. ஒன்றிய பாஜ அரசு முதலில் நாட்டின் கண்களாக போற்றப்படும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இவ்வாறு ‘தினகரன்’ நாளேடு தலையங்கம் எழுதியுள்ளது.