கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
ஒட்டுமொத்தமாக 135 தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸுக்கு நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த வெற்றி வரும் நாடாளுமன்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது. இந்த தேர்தலில் மோடி பல முறை கர்நாடகா வந்து பிரச்சாரம் செய்தும் பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
அதோடு இந்த தேர்தலில் முக்கியமாக பாஜகவை சேர்ந்த 14 அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் பெரும் தோல்வியை தழுவினர்.பாஜகவின் இந்த தோல்வி அடுத்த வருடம் நடக்கும் நாடாளுமன்றத்தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாஜகவின் இந்த தோல்வி குறித்து பல்வேறு அரசியல் பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆளும்கட்சியாக தேர்தலை சந்தித்தும் 30 தொகுதியில் பாஜக டெபாசிட் இழந்ததுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே கர்நாடகாவில் பாஜக சில இடங்களில் மட்டுமே அதிக வாக்குகளை பெற்று வருகிறது. அதே நேரம் பல இடங்களில் பாஜகவின் கட்டமைப்பு கூட மோசமான நிலையிலேயே இருந்து வருகிறது.
மேலும், கடந்த சில ஆண்டுகளாக தேர்தலில் சீட் எண்ணிக்கையில் பாஜகவை விட காங்கிரஸ் குறைவான எண்ணிக்கையில் வெற்றிபெற்றாலும் வாக்குசதவீதத்தில் எப்போதும் காங்கிரஸ் நல்ல நிலையிலேயே இருந்து வரும். தற்போது நடந்துள்ள சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் மாநிலம் முழுவதும் கணிசமான எண்ணிக்கையில் வெற்றிபெற பாஜக 30 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், அதிலும் 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 2 முதல் 5% வாக்குகளை மட்டுமே பெற்று பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது.