இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2014ம் ஆண்டிலிருந்து மாதம் தோறும் மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் பேசி வருகிறார். இதில் அரசின் திட்டங்கள் குறித்தும், மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் உரையாடி வருகிறார். இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் 34 தூர்தர்ஷன் சேனல்களிலும், 91 தனியார் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி நாட்டில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து மக்களவையில் பேசாமல், எதிர்க்கட்சி தலைவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் பொதுக்கூட்டத்தில் பேசுவதுபோல் தனியாகப் பேசி வருகிறார் என ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் பிரதமரின் மன் கீ பாத் நிகழ்ச்சியை கேட்க வராத மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி பிரதமர் மடி வானொலியில் தனது 100 ஆவது மன் கி பாத் நிகழ்ச்சியில் உரை ஆற்றியிருந்தார். இதற்கான நாடு முழுவதும் பாஜக சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
அதன்படி ஏப்ரல் 30 ஆம் தேதி ஞாயிற்று கிழமை அன்று உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள தனியார் பள்ளியில் பிரதமரின் உரையை கேட்க மாணவர்கள் வரவேண்டும் என பள்ளி நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டது. ஆனால் ஞாயிற்று கிழமை அன்று பெரும்பாலான மாணவர்கள் வராமல் இருந்தாக கூறப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து பிரதமரின் உரையை கேட்க பள்ளிக்கு வராத மாணவர்கள் அனைவரும் ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும் அல்லது மருத்துவ அறிக்கை கொண்டு வர வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் சார்பில் வாட்ஸ்அப் மூலம் மாணவர்களின் பெற்றோருக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்கள் சார்பில் தலைமை கல்வி அலுவலருக்கு புகார் அனுப்பப்பட்ட நிலையில், இது குறித்து விளக்கம் கேட்டு பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக 3 நாட்களில் பள்ளி விளக்கம் அளிக்கவில்லை என்றால் மாணவர்களிடம் பணம் கேட்டது உறுதி செய்யப்படும் என்றும் அதன்பிறகு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.