1 - 8 வகுப்பு மாணவர் சராசரியை காண்பித்து ஏதோ சிறுபான்மையினர் சமத்துவத்தையே எட்டி விட்டார்கள் என்ற பிம்பத்தை கட்டுவது சிறுபான்மை "நல" அமைச்சகத்திற்கு அழகல்ல என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரை எம்.பி சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரமலான் வாழ்த்துக்கள் சொல்ல வேண்டிய நேரம். ஆனால் இஸ்லாமிய குழந்தைகளின் எதிர்காலம் பற்றியும் பேச வேண்டியுள்ளது. முதல் வகுப்பில் இருந்து 8 ஆம் வகுப்பு வரை சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை (Pre Matric Scholorship) அடியோடு நிறுத்தப்பட்டது குறித்து ஒன்றிய அரசின் சிறுபான்மை நல அமைச்சர் ஸ்மிருதி ஜூபின் ராணி அவர்களுக்கு 28.11.2022 அன்று கடிதம் எழுதி இருந்தேன். அதற்கு அமைச்சர் 29.03.2023 அன்று தேதியிட்ட பதிலை ( SS-14/3/2020- Scholorship- MoMA - P - 3) அனுப்பியுள்ளார்.
எதற்காக 1 - 8 ஆம் வகுப்பு பயிலும் இஸ்லாமிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை தொடர வேண்டும் என்பதற்கு நிறைய காரணங்களை நான் எனது கடிதத்தில் பட்டியல் இட்டு இருந்தேன். சிறுபான்மை நல அமைச்சகத்தின் இணைய தளம் இத்திட்டத்தின் நோக்கமாக இடை நிற்றல் இல்லாமல் இக்குழந்தைகள் கல்வி நீடித்து தொடர வேண்டுமென்று சொல்லி இருப்பதையும், கல்வி உதவித் தொகை என்பது கல்விக் கட்டணத் தேவையையும் கடந்தது என்பதையும், போக்குவரத்து - கல்விச் சுற்றுலா போன்றவற்றிற்கு செல்வழிக்க வேண்டி இருப்பதையும், அரசு பள்ளிகளில் மட்டுமே இலவச உணவுத் திட்டங்கள் அமலாவதையும், சச்சார் குழு பரிந்துரைகள் போன்ற ஆழ்ந்த ஆய்வுக்கு பின்னரே இந்த இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதையும் அக்கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தேன்.
ஆனால் அமைச்சரோ இதற்கெல்லாம் பதில் எதுவும் அவரது கடிதத்தில் அளிக்கவில்லை. அதற்கு மாறாக சாரமற்ற மூன்று காரணங்களை கண்டு பிடித்து கூறியுள்ளார். ஒன்று, சிறுபான்மை சமூகங்களை சார்ந்த மாணவர்கள் துவக்க நிலை, இடை நிலை கல்வி பயில்வது தேசிய சராசரிக்கு இணையாக இருக்கிறதாம். தங்களது குழந்தைகள் படிக்க வேண்டுமே என்று கஷ்டப்பட்டும், கடன் வாங்கியும் கூட பள்ளிக்கு அனுப்புகிற வாதை புரியாமல் அமைச்சர் பேசுவது வேதனைதான்.
இதற்காக அவர்கள் தங்களின் அன்றாடத் தேவைகளில் எதை குறைக்கிறார்கள், தியாகம் செய்கிறார்கள் என்பதையெல்லாம் ஏழை எளிய சிறுபான்மை மக்களின் சூழல் அறிந்தவர்களால் மட்டுமே உணர முடியும். அதுவும் 1 - 8 வகுப்பு மாணவர் சராசரியை காண்பித்து ஏதோ சிறுபான்மையினர் சமத்துவத்தையே எட்டி விட்டார்கள் என்ற பிம்பத்தை கட்டுவது சிறுபான்மை "நல" அமைச்சகத்திற்கு அழகல்ல.
இரண்டாவதாக ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு 1 - 8 வகுப்புகளுக்கு கல்வித் தொகை வழங்கப்படாததால் ஒரே அளவுகோலுக்கு சிறுபான்மையினரையும் கொண்டு வருகிறார்களாம். என்ன வாதம் பாருங்கள்! ஒரே அளவுகோல் எனில் இதர விளிம்பு நிலை மக்களில் யார் யாருக்கு இந்த பயன் விரிவாக வேண்டும் என்றல்லவா பார்க்க வேண்டும்! கொடுத்து செய்ய வேண்டியதை பறித்து செய்வது "நல" அமைச்சகத்தின் அணுகுமுறையாக இருக்கலாமா?
அத்தோடு நிற்கவில்லை. மேல் நிலைக் கல்வி பயிலும் சிறுபான்மை பெண்கள் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துமாம் இந்த அரசு. "ஹிஜாப்" பிரச்சினையில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய மாணவிகளின் கல்வியை பறித்த அரசியல் கட்சியிடம் இந்த "கருணை" வெளிப்படுவதை என்ன சொல்வது? வேரில் வெந்நீர் ஊற்றி விட்டு மலர்களை பாதுகாக்க போகிறோம் என்று கூறுவதை நம்ப முடியுமா "நல" அமைச்சகமே?
எனது கருத்துக்களை வலியுறுத்தி இன்று மீண்டும் ஒன்றிய சிறுபான்மை நல அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். ரம்ஜான் திருநாள் அன்று நல்ல செய்தியை சிறுபான்மை மக்களுக்கு சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளேன்.” எனத் தெரிவித்துள்ளார்.