கொரோனா தாக்கம், ரஷ்யா -உக்ரைன் போர் போன்ற காரணங்களால் உலக அளவில் பொருளாதாரத்தில் பெரும் மந்த நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக உலகெங்கும் வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளது. அதோடு பங்கு சந்தைகளிலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இது போன்ற காரணங்களால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதே காரணங்களால் உலகத்தின் பெரும் பணக்காரர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெப் பிசோஸ், ஏலான் மஸ்க், மார்க் சுக்கர்பெர்க் போன்ற பணக்காரர்களின் சொத்து மதிப்பும் 60 பில்லியன் டாலர் அளவு கடுமையாக சரிந்துள்ளது.
உலக அளவில் ஏற்பட்டுள்ள இந்த பொருளாதர பாதிப்பு இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இந்தியாவின் ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவு சரிந்துள்ளது. ஆனால் இந்த பாதிப்பு ஏதும் மோடியின் செல்ல பிள்ளைகளான அதானி, அம்பானியை கொஞ்சம் கூட பாதிக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.அதிலும் அதானியின் சொத்துமதிப்பு பல மடங்கு அதிகரித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நாட்டின் விமான நிலையம், துறைமுகம் போன்ற முக்கிய ஒப்பந்தங்கள் அனைத்தும் அதானிக்கே வழங்கப்படுவதே அவரின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதனை நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பகிரங்கப்படுத்திய நிலையில், தற்போது அவரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது பிரதமர் மோடி கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் வனவிலங்கு சரணாலயத்திற்கு சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து கர்நாடகா காங்கிரஸ் கட்சி அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் மோடியை கிண்டல் செய்து ஒரு பதிவினை பகிர்ந்துள்ளது. அதில், "அன்புள்ள நரேந்திர மோடி, பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு திட்டத்தை காங்கிரஸ் கட்சி 1973ல் அறிமுகப்படுத்தியது. அந்தத் திட்டத்தின் காரணமாகவே நாட்டில் புலிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்தது. அதன் பலனைத் தான் நீங்கள் இன்று சஃபாரி சென்று அனுபவிக்கிறீர்கள். இந்நிலையில் நாங்கள் உங்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறோம். பந்திப்பூரை அதானிக்கு விற்றுவிடாதீர்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.