அரியலூர் மாவட்டத்தில் ரூ.131.82 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 700 படுக்கைகளுடன் 5 தளங்கள் செயல்படும், மாவட்ட மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையின் மருத்துவ சேவையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்பின் மருத்துவமனையின் சிறப்பு அம்சங்களை பார்வையிட்டு, நோயாளிகளிடம் உடல்நல குறித்து அமைச்சர் விசாரித்தார்.
அதனை தொடர்ந்து அரசு பள்ளிகளில் பயின்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ கல்லூரியில், மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி, 2539 பயனாளிகளுக்கு ரூ.13.68 கோடி மதிப்பீட்டில் அரசு துறைகளின் சார்பில் நலத்திட்டங்களை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
அதற்கு முன்னதாக மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அரியலூர் அரசு மருத்துவ கல்லூரியில் ரூ.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அரங்கிற்கு, நீட் தேர்வை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தி உயிரிழந்த மாணவி 'அனிதா'-வின் பெயர் சூட்டப்படவுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "நேற்று முதலமைச்சர் என்னை தொலைபேசியில் அழைத்து, நீங்கள் சட்டமன்றத்தில் வைத்த கோரிக்கையான அரியலூரில் மருத்துவமனை அனிதா பெயரில் நினைவு அரங்கம் அமைக்க வேண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
நீட் தேர்வுக்கான ரகசியம் வைத்துள்ளதாக சொல்கிறீர்களே அது என்ன என்று எதிர்கட்சி தலைவர் கேட்டு வருகிறார். அந்த ரகசியம் என்னவென்றால் தைரியமாக எங்கள் கல்வி உரிமை பறிக்கப்படும் போது குரல் கொடுப்பதே ரகசியம்.
அரியலூர் மருத்துவக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் 'அனிதா' என்ற பெயரை பார்க்கும்போது, நீட் தேர்வு ரத்துதான் ஞாபகம் வரவேண்டும். நீட் தேர்வுக்கு எதிரான சட்ட போராட்டம் தொடரும், மருத்துவ பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வு தேவை இல்லை என்பது தான்.
கடந்த முறை பிரதமர் சந்தித்தபோது நான் வைத்த முதல் கோரிக்கையே நீட் விலக்கு தான். பிரதமர் பல்வேறு காரணங்களை கூறி விலக்கு அளிக்க முடியாது என கூறினார். அப்போது நான் அவரிடம் நீட்டுக்கு எதிரான எங்கள் சட்ட போராட்டம் தொடரும் என தெரிவித்தேன்.
இந்த 20 மாதங்களில் கழக அரசு பல நிறைவேற்றியுள்ள திட்டங்களை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 1 கோடியே 10 ஆயிரம் பேர் பயன்பெற்று உள்ளனர், கொரோனா காலத்தில் மாணவர்கள் கல்வி கற்றல் பாதிப்பு ஏற்படாத வண்ணம் இல்லம் தேடி கல்வி, இன்னுயிர் காப்போம், மற்றும் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் முதல் கையொப்பமே பெண்கள் பேருந்தில் இலவச பயணம் செய்வது தான். இதுவரை 250 கோடி பேர் இத்திட்டம் மூலம் பயணம் பெற்றுள்ளனர்.
மேலும் இன்னுயிர் காக்கும் 48, பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்று அவர்களுக்காக காலை சிற்றுண்டி உணவு திட்டம் மூலம் 2 லட்சம் மாணவர்கள் பயன்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி பல்வேறு திட்டங்களை நமது முதலமைச்சர் சிறப்பாக செய்து வருகிறார்." என்றார்.
முன்னதாக நீட் தேர்வுக்கு எதிராக போராடி உயிரிழந்த அனிதா பெயரில் அரியலூரில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் ஓர் அமைப்பிற்கு அனிதா பெயர் வைக்க வேண்டும் என சட்டமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரியலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையில் 22 கோடி மதிப்பீட்டில் 850 பேர் அமரும் வகையில் கட்டப்பட்டுள்ள கூட்ட அரங்கிற்கு அனிதா நினைவு அரங்கம் என பெயர் சூட்டப்படும் என அறிவித்தார். அந்த அனிதா பெயரிலான கூட்ட அரங்கை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.