அதானி குழும நிறுவனங்கள் வரவு - செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்எல்சி என்ற ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டியது. பங்குச்சந்தையிலும் முறைகேட்டில் ஈடுபட்டதன் மூலமே தம் நிறுவனப் பங்குகள் விலை அதானி குழுமம் அதிகரித்துள்ளது என்றும் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.
அதேபோல் கரீபியன் நாடுகள், மோரீஷியஸ், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் போலி நிறுவனங்களை அதானி நடத்தி வருகிறார். அரசாங்கம் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் உதவியுடனே அந்த மோசடிகள் நடந்துள்ளது என பகிரங்கமாகவே ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் கடும் சரிவை சந்தித்தன. இதன் காரணமாக அதானி நிறுவனத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் சரிவை சந்தித்துள்ளது. இதனால் அதானி உலக பணக்காரர் வரிசையில் 3-வது இடத்தில் இருந்து 22-வது இடத்துக்கு சரிந்துள்ளார். அவரது சொத்துமதிப்பு பல லட்சம் கோடி சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பங்குச்சந்தையை கண்காணிக்கும் செபி அமைப்பு விசாரணையை தொடங்குவதாக அறிவித்தது. அதோடு இந்திய ரிசர்வ் வங்கியும் அதானியால் வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்தும் முன்னாள் நீதிபதி தலைமையில் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
அதானி நிறுவன பங்குகளின் இந்த சரிவு காரணமாக அதில் முதலீடு செய்திருந்த LIC நிறுவனமும் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது. அதானியின் நிறுவனங்களான அதானி டோட்டல் கேஸ், அதானி என்டர்ப்ரைசஸ் , அதானி போர்ட்ஸ் , அதானி க்ரீன் எனர்ஜி, ஏசிசி,அதானி ட்ரான்ஸ்மிஷன் போன்ற நிறுவனங்களில் மோடி ஆட்சிக்கு வந்தபின்னர் LIC நிறுவனம் முதலீடு செய்திருந்தது.
அதானியின் நிறுவனங்களில் LIC நிறுவனம் ரூ.30,127 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தது. இதன் மதிப்பு ஜனவரி 24 ஆம் தேதி 72,193.87 கோடி ரூபாயாக இருந்த நிலையில், அதன் பின்னர் கடும் சரிவை சந்தித்தது. அப்போது LIC மேல் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஜனவரி 27-ம் தேதி அன்று அதானி நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த LICயின் மதிப்பு ரூ. 56,142 கோடியாக இருந்ததாகவும், இதனால் LIC-க்கு இழப்பு இல்லை என்றும் LIC நிர்வாகம் அறிவித்திருந்தது.
ஆனால், தற்போது வரை அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு குறைந்து வருவதால் தற்போது இதன் மதிப்பு ரூ.26,861.88 கோடியாக சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அதானி நிறுவனத்தின் முதலீடு செய்த முதலீட்டு தொகையை விட அதிக நஷ்டம் LIC-க்கு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.