2021ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, பிறகு பிப்ரவரி 27ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்குத் தொகுதி ஒதுக்கப்பட்டது. வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு பெற்றார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து கூட்டணிக் கட்சி தலைவர்கள் தினமும் பிரச்சாரம் செய்து வாக்குகளைச் சேகரித்து வருகின்றனர்.
தங்களை எதிர்க்கட்சியாக தங்களை தாங்களே நினைத்துக் கொண்டு தினமும் ஏதாவது உளறிவரும் அண்ணாமலை போன்ற பா.ஜ.கவினர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக முதலில் அறிவித்தனர். ஆனால் ஏற்கனவே பலத் தேர்தல்களில் நோட்டாவோடு போட்டிப்போட்டு அசிங்கப்பட்டது போதும் என்று நினைத்து இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை என ஜகா வாங்கி விட்டனர்.
இவர்கள் கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.கவோ தற்போது இ.பி.எஸ். அணி மற்றும் ஓ.பி.எஸ் அணி என இரண்டாக உடைந்து உள்ளது. இதனால் தங்களது பலத்தைக் காட்ட இந்த தேர்தலைப் பயன்படுத்தப் போகிறோம் என ஒருவர் மாறி ஒருவர் வேட்பாளர்களை அறிவித்தனர். 'இரட்டை இலை சின்னம்' தொடர்பான வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடந்து வருவதால் யாருக்கு 'இரட்டை இலை சின்னம்' கிடைக்கும் என்ற சிக்கல் உள்ளது.
மேலும் கூட்டணி உடையும் நிலையும் உருவானது. இவர்களும் சென்றுவிட்டால் நம்மால் நோட்டாவோடு கூட போட்டி போட முடியாது என்பதை உணர்ந்த பா.ஜ.க, இருவரிடத்திலும் பேசி ஓ.பி.எஸ் அணியைத் தேர்தலில் இருந்து பின்வாங்க வைத்துள்ளது.
இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இ.பி.எஸ் அணி தான் நிற்கிறது என்பது உறுதியாகியுள்ளது. நாங்கள் தான் எதிர்க்கட்சி என்று தினம் தினம் கூறிவரும் அண்ணாமலை போன்ற பா.ஜ.கவினர் தி.மு.கவுக்கு எதிராகக் களமிறங்க வேண்டியதுதானே என DMK IT Wing கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து DMK IT Wing வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'நான் வளர்கிறேனே மம்மி' என்று காம்ப்ளான் விளம்பரத்தில் வருவதைப் போல, 'தமிழ்நாட்டில் நாங்கள் வளர்ந்துவிட்டோம்; நாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி' என சிறிது காலம் பிதற்றித் திரிந்த ஆட்டு மந்தை கூட்டத்திற்கு தமிழ்நாட்டில் பா.ஜ.க. வளர்ச்சியின் உண்மை நிலையை இடித்துரைத்திருக்கிறது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.
களத்தில் நாம் நின்றால் உதய சூரியனின் தகிப்பில் தாமரை பாவமாய் கருகிப் போகும் எனத் தெரிந்து, அ.தி.மு.க. அணிகளுக்கிடையே சமரச பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கிறது பா.ஜ.க. வெற்றுக் கூச்சல் இடுபவர்களுக்கு திராணியிருந்தால் தி.மு.க.வுக்கு எதிராக களமிறங்க வேண்டியதுதானே?
கடந்த தேர்தல்களில் எல்லாம் அங்கு தாமரை சொற்ப வாக்குகள் பெற்றது கண் முன் வந்து போகுமா இல்லையா? இரட்டை இலையோ, தாமரையோ ஈரோடு கிழக்கில் வெல்லப்போவது 'உதயசூரியன்' என்பதுதான் உண்மைநிலை." தெரிவித்துள்ளது.