கடந்த டிசம்பர் 10-ம் தேதி திருச்சியில் நடைபெற்ற பாஜக இளைஞர் அணி கூட்டத்தில் கலந்து கொண்ட பின் பாஜக தலைவர் அண்ணாமலையும், அக்கட்சியின் இளைஞர் அணி நிர்வாகி தேஜஸ்வி சூர்யாவும் விமானம் மூலம் சென்னைக்கு வந்தனர். அப்போது விமானத்தில் ஏறிய அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா ஆகியோர் விமானம் புறப்படும் நேரத்தில் 'எமர்ஜென்சி' கதவிற்கான பட்டனை அழுத்தி விளையாட்டு காட்டியதாக கூறப்படுகிறது.
இதனால், பயணிகள் அச்சமடைந்ததோடு மட்டுமின்றி, விமானத்தில் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனடியாக விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டு மீண்டும் விமானத்தை சோதனை செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் 3 மணி நேரம் விமானம் காலதாமதமாக புறப்பட்டுச் சென்றதாக தெரிகிறது. இதையடுத்து நடந்த சம்பவத்துக்கு பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து விட்டு சென்றதாக செய்திகள் வெளியாகின.அதைத் தொடர்ந்து விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும்தேஜஸ்வி சூர்யா ஆகியோர் திறந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி "2 ஆர்வக்கோளாறுகள் விமானத்தின் Emergency கதவை திறந்து விளையாடியது பற்றி டிச-29 அன்று நான் கேள்வியெழுப்பி இருந்தேன். இன்று DGCA விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு வாட்ச் கட்டுவது தேசப்பற்றென உருட்டிய பொய்யர், சுதந்திர காற்றை சுவாசிக்க கதவை திறந்தேன் என உருட்டாமல் இருந்தால் சரி" என்று விமர்சித்துள்ளார்.
மேலும், அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் விமானத்தில் எமர்ஜென்சி வழியை திறந்தது இளைஞர் அணி நிர்வாகி தேஜஸ்வி சூர்யாதான் என்றும் அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் உடனிருந்தார் என்பதை உறுதிப்படுத்தியிருந்தார். இந்த விவகாரம் பெரிதான நிலையில் , எமர்ஜென்சி கதவை திறந்த விவகாரத்தில் பாஜக எம்.பி.தேஜஸ்வி சூர்யா, தனது செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளதாக விமான போக்குவரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் . இந்த விவகாரம் ஊடகங்களில் வெளிவந்த நிலையில், "தவறுதலாகவே எமர்ஜென்சி கதவை திறந்துள்ளார் என்றும், தனது செயலுக்கு தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கோரிவிட்டார் என்றும் விமான போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "தேஜஸ்வி விமானக் கதவை திறக்கவில்லை, அவர் படித்தவர். விமானத்தின் அவசரக் கதவில் ஒரு இடைவெளி இருந்தது. அதைப் பார்த்து தேஜஸ்விதான் விமானக் குழுவிடம் கூறினார். நானும் இடைவெளி இருப்பதைப் பார்த்தேன். இதையடுத்து பயணிகள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு சோதனைகள் நடந்தன. தவறு செய்ததாக அவர் மன்னிப்பு கோரவில்லை. அவர் மீது தவறு இல்லாதபோதும், எம்.பி என்ற ஒரு பொறுப்பில் இருப்பதால் அவர் மன்னிப்பு கேட்டார்" என்று கூறியுள்ளார். தேஜஸ்வி யாதவே நடந்த தவறுக்கு மன்னிப்பு கோரியுள்ள நிலையில், அண்ணாமலையின் இந்த பேச்சை பெரிய உருட்டு என சமூக வலைதள வாசிகள் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் இந்த விவகாரத்தை கலாய்த்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் "வாழ்க தமிழ்நாடு, நான் இண்டிகோ விமானத்தில் கோவை சென்று கொண்டிருக்கிறேன். நான் விமானத்தின் அவசர கால கதவு பக்கத்தில் இருக்கும் இருக்கையில் அமர்ந்துள்ளேன். ஆயினும், நான் அவசரகால கதவை திறக்கபோவதில்லை. ஏனென்றால், நான் மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் அந்த கதவை திறப்பதால் பயணிகளுக்கு ஆபத்து. சுய அறிவு உள்ளவர்கள் யாரும் இந்த காரியத்தை செய்யமாட்டார்கள். அத்துடன் எனக்கு மட்டுமில்லாமல் அனைத்து பயணிகளுக்கும் பயண நேரம் 2 மணிநேரம் மிச்சமாகும்” என்று கூறி அண்ணாமலை மற்றும் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யாவை கிண்டல் செய்துள்ளார்.