மதம், சாதி பெயரில் இரு சமூகத்தினருக்கு இடையே சண்டையை மூட்டி விடுகிறது ஒன்றிய அரசு என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சுன் ஜகர் யாத்ராவை தொடங்கி வைத்த பிறகு பேசிய சரத் பவார்," நமது விவசாயிகள் உற்பத்தியை அதிகரித்துள்ளதால் நாட்டில் பசியின்மை பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும். ஆனால் உற்பத்திக்கு ஈடான பணம் கொடுக்கப்படுவதில்லை.
விவசாயிகளுக்குக் கொடுப்பதற்குப் பதில் இடைத்தரகர்களுக்கே கொடுக்க விரும்புகின்றனர். இப்படிச் செய்வதால் சாமானியர்கள் பணவீக்கத்தின் கோர பிடிக்குத் தள்ளப்படுகின்றனர்.
இன்றைய இளைஞர்கள் படித்தவர்கள். அவர்களுக்கு வேலை கேட்கும் உரிமை உள்ளது. ஒருமுறை பயணத்தின் போது ஒரு கிராமத்திற்குச் சென்று இருந்தேன். அப்போது 25 முதல் 30 வரை உள்ள இளைஞர்களிடம் பேசினேன். இதில் பலர் பட்டதாரிகள். ஆனால் அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை.
மேலும் வேலை இல்லாததால் திருமணத்திற்குப் பெண் கிடைக்கவில்லை என கூறினர். இது அந்த கிராமத்தில் மட்டுமல்ல. எல்லா மாநிலங்களிலும் இதே நிலைதான். அவர்களுக்கு வேலை கொடுப்பது, சுயதொழிலுக்கு ஊக்குவிப்பது என்று இந்த அரசு செயல்படாமல் மதம், சாதி பெயரில் சண்டையை உருவாக்கி வருகிறது" என தெரிவித்துள்ளார்.