பா.ஜ.க. அரசு அசம் கான் மீது தினமும் பொய் வழக்குகள் பதிவு செய்து துன்புறுத்தி வருவதாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 2019 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏவான அசம் கான் கான், அப்போதைய ராம்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் அவுஞ்சநேய குமார் சிங், முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சய் கபூர் ஆகியோருக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் விதமான கருத்துக்களைப் பயன்படுத்தினார்.
இது பெரும் சர்ச்சையான நிலையில் அவர் மீது பாஜக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் அசம் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற எம்.பி. அல்லது எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி தற்போது சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ பதவியில் இருந்து அசாம் கான் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த உத்தர பிரதேச சட்டப்பேரவை கூட்டத்தொடரில், அசம் கானை தகுதி நீக்கம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து சமாஜ்வாடி கட்சியினர் ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. மேலும் இது பொய் வழக்கு என்றும் குற்றம்சாட்டி வருகிறது.
இது குறித்து சமாஜ்வாடி கட்சி தலைவரும், உத்தர பிரதேச சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் பேசுகையில், "அசம் கான் தான் பா.ஜ.க. அரசின் இலக்கு. தினமும் அவர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டு வருகிறார். அசம் கான் மதவாத சக்திகளின் தீவிர போட்டியாளராக இருப்பதாலும், ஜனநாயகம் மற்றும் சோசலிசத்தில் உறுதியாக இருப்பதாலும் பா.ஜ.க.வுக்கு அவர் கண்புரையாக தெரிகிறார்.
அசம் கான் அரசியல் சாசனத்திற்காகவும், மதச்சார்பின்மைக்காவும் போராடிய தலைவர். அவரது ஜௌஹர் பல்கலைக்கழகம் பா.ஜ.க.வால் தொடர்ந்து குறிவைக்கப்பட்டு வருகிறது. அசம் கான் அமைச்சராக இருந்தபோது, கும்பமேளாவை வெற்றிகரமாக ஏற்பாடு செய்தார்.
மேலும் இந்த நிகழ்வு ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வுக்கான பாடமாக மாறியது, அதில் அவரது முயற்சிகள் பாராட்டப்பட்டது. இது குறித்து அங்கு வந்து பேச வேண்டும் என்று ஹார்வர்ட் பல்கைலைக்கழகம் கூட அழைத்தது. இது பா.ஜ.க.வுக்கு பிடிக்கவில்லை. அசம் கான் கல்வி நிறுவனத்தை அழிக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. உறுதியாக உள்ளது. எனவே, அசம் கான் மீது பொய் வழக்குகளை குவித்துள்ளது" என்றார்.
அசம் கான், முன்னதாக ஜனதா தல் மற்றும் லோக் தால் கட்சிகளில் இருந்துள்ளார். தற்போது வரை இவர் 10 முறை எம்.எல்.ஏ வாகவும், 2 முறை எம்.பி யாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.