பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அதிலும், தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, பஞ்சாப் போன்ற மாநில ஆளுநர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள் போலவே செயல்பட்டு வருகின்றனர்.
ஆளுநர்களின் இந்த ஜனநாயக விரோதப் போக்குக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தற்போதைய நிலையில் கேரள மாநிலத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பது தொடர்பான விஷயங்களில் ஆளுநரின் செயல்பாடு காரணமாக மாநில அரசுடன் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டை போல கேரளத்திலும் துணை வேந்தர்களை நியமிப்பதில் கவர்னரின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதற்கு கேரளா ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறார்.
இந்த பரபரப்பான சூழலில் கேரளா, கண்ணூர், மகாத்மா காந்தி, காலடி சமஸ்கிருதம், அப்துல்கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்பட 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் இன்று காலை 11 மணிக்குள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கவர்னர் ஆரிப் முகம்மது கான் உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநரின் இந்த உத்தரவுக்கு ஆளும் இடதுசாரி அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், துணை வேந்தர்கள் பதவி விலகி தேவையில்லை எனவும் கூறியிருந்தது.
இதன் காரணமாக மாநில அரசின் அறிவுரையுடன் ஆளுநரின் உத்தரவை 9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களும் மறுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கேரள ஆளுநர் ஆரிப் கான் பதவி விலக மறுத்த 9 பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில் ஆளுநரின் உத்தரவை எதிர்த்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். இது தொடர்பாக வழக்கு விசாரணைக்கு வந்தபோது துணை வேந்தர்கள் பதவியில் நீடிக்கலாம் என உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.