இலங்கையில் கொரோனா தொற்றின் காரணமாக அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்குப் பெரிய வருவாய் என்றால் அது சுற்றுலாத்துறைதான். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று நீடித்து வருவதால், சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாகக் குறைந்துவிட்டது.
இதனால், அந்நிய செலாவணி இருப்பு வெகுவாகக் குறைந்ததால் ரூபாயின் மதிப்பு வேகமாகச் சரிந்துவிட்டது. இதன் காரணமாக உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செல்வதில் அந்நாட்டிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, மின்னல் வேகத்தில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துகொண்டே சென்றது. அந்நிய செலாவணி கையிருப்பை தக்கவைக்கும் விதமாக கச்சா எண்ணெய் இறக்குமதி இலங்கையில் பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு வரலாற்றில் இல்லாத அளவு பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்தது. மேலும், எரிபொருள் கிடைக்காமல் மக்கள் தள்ளாடிய காட்சிகளும் காணப்பட்டது.
அதைத் தொடர்ந்து மக்கள் போராட்டம் காரணமாக ராஜ்பக்சேக்களின் ஆட்சி அங்கு முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து பதவியேற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து. அதோடு பொருளாதார மந்த நிலையும் இலங்கையில் சற்று குறைந்து வந்தது. சர்வேதேச அளவில் கச்சா எண்ணெய் விலையும் சமீபத்தில் சரிந்தது.
இந்த நிலையில், இலங்கையில் நேற்று முதல் பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வந்தது. அதன்படி, 92 ரக பெட்ரோலின் விலையில் 40 ரூபாய் குறைக்கப்பட்டு 410 ரூபாய்க்கும், 95 ரக பெட்ரோலின் விலையில் 30 ரூபாய் குறைக்கபப்ட்டு 510 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் மற்ற எரிபொருள்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் பெட்ரோல் விலையை குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இலங்கை மக்களை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இலங்கையில் இன்று பெட்ரோல் ரூ410 என்றால் அது இந்திய மதிப்பின்படி ரூ91.89 ஆகும். அதன்படி இலங்கையில் இந்திய மதிப்பின்படி ரூ8.97 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் இந்திய ஊடகங்களில் வெளியான நிலையில், கச்சா எண்ணெய் விலை குறைத்த நிலையிலும் இந்தியாவில் இன்னும் பெட்ரோல்,டீசல் விலையை குறைக்காததன் காரணம் என்ன என்று ஒன்றிய அரசை நோக்கி இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.