இங்கிலாந்தின் பழமைவாத கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் 2019ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே உலகளவில் பல விமர்சனங்களுக்கு உள்ளானார். அவரது அமைச்சரவை சகாக்களே அவர் மீது கடும் விமர்சனத்தை வைத்தனர்.
இதன் காரணமாக அவர் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் அடுத்த பிரதமராக வரப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. இந்த பதவிக்கு பலர் போட்டியிட்ட நிலையில், நிதித்துறை அமைச்சராக இருந்த ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த லிஸ் ட்ரஸ் ஆகியோர் இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றனர்.
ஆரம்பத்தில் அதிக ஆதரவு பெற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் அடுத்த சுற்று செல்ல செல்ல ஆதரவை இழந்து வந்ததாக தகவல் வெளியானது. அதன்பின்னர் பழமைவாத கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் வாக்களித்த இந்த தேர்தலில் இறுதிச்சுற்றில் வென்று இங்கிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமராக தேர்வாகியிருக்கிறார் லிஸ் ட்ரஸ்.
1975-ல் பிறந்த இவர், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை.யின் கீழுள்ள மெர்ட்டன் கல்லூரியில் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரிவில் பட்டம் பெற்றுள்ளார். முதலில் லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியின் இளைஞரணியில் சேர்ந்த இவர் பின்னர் அதிலிருந்து விலகி, 1996-ம் ஆண்டு பழமைவாத கட்சியில் இணைந்தார். 2001 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த அவர், பின்னர் 2005 நாடாளுமன்றத் தேர்தலில், வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்கு நுழைந்தார்.
பின்னர் படிப்படியாக அக்கட்சியின் முக்கிய உறுப்பினராக மாறிய லிஸ் ட்ரஸ், டேவிட் காமெரூன், தேரேசா மே அமைச்சரவையில் 2012-ம் ஆண்டு முதல் உணவு, குழந்தைகள் நலம், சுற்றுச்சூழல், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சராக இருந்தார். பின்னர் 2019-ம் ஆண்டு போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் பெண்கள், சமத்துவத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றவர் 2021 செப்டம்பர் மாதத்தில் இங்கிலாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சரானார். இந்த நிலையில் தற்போது இங்கிலாந்து பிரதமராகவுள்ளார்.