திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்கக் கூட்டம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்றது.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அவரது ஆட்சியின் போது சேலம் மாவட்ட மக்களுக்காக செய்தவை பற்றி சுட்டிக்காட்டினார்.
அதில், “சேலத்தைச் சேர்ந்தவர்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார். நான்கு ஆண்டுகள் இருந்தார். தேர்தலுக்கு முன்னதாக அவர் தொகுதிக்கும் சென்று கிராம சபைக் கூட்டத்தில் பங்கெடுத்தேன். அங்கே செல்வதற்கு முன்னதாக இந்த எடப்பாடி தொகுதியில் மட்டும் வேலை கேட்டு பதிவு செய்துள்ளவர்கள் எத்தனை பேர் என்பதை எடுக்கச் சொன்னேன்.
சுமார் பத்தாயிரம் பேர் வேலைக்கான பதிவு செய்திருந்தார்கள். அவர்களுக்கு வேலை எதுவும் தரப்படவில்லை. அனைத்து விண்ணப்பங்களையும் கட்டுக்கட்டாக பிரிண்ட் எடுத்துச் சென்று அதே மக்களிடம் காட்டினேன்.
அத்தனை பேரின் வேலை வாய்ப்புக்காக ஒரு திட்டம் கூடத் தீட்டாதவர் தான் பழனிசாமி. முதலமைச்சரின் தொகுதியாக இருக்கிறது, இங்குள்ள மக்களிடம் பெரிய அளவில் புகார் இருக்காது என்று நினைத்தேன். ஆனால் இரண்டு மணிநேரம் பல்வேறு புகார்களை மக்கள் சொன்னார்கள். 'ரோடு மட்டும் போடுறாங்க, அதுவும் போட்ட ரோட்டையே திரும்பத் திரும்ப போடுகிறார்கள்' என்று பொதுமக்கள் புகார் சொன்னார்கள்.
1. எடப்பாடி தொகுதியில் ஜவுளிபூங்கா
2. நெருஞ்சிப்பேட்டையில் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம்
3. கொங்கணபுரத்தில் தொழில்பேட்டை
4. மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் பயன்பாடு
5. எடப்பாடி அரசு மருத்துவமனை மேம்பாடு
6. கொங்கணபுரம் கூட்டுறவு வங்கி விவகாரம்
7. மின் மயானங்கள்
8. தேங்காய், மா.பருத்தி, மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றுக்கு ஆதார விலை
9. பொதுக்கழிவு சுத்திகரிப்பு நிலையம்
10. நிலக்கடலை விவசாயிகளுக்கு தனிகூட்டுறவு சங்கம்
- இந்த கோரிக்கைகள் எதையும் பழனிசாமி தனது சொந்தத் தொகுதிக்கு செய்து தரவில்லை. இன்றைக்கு தினந்தோறும் அவர் இந்த ஆட்சியைக் குறை சொல்லி அறிக்கை விடுகிறார்.
அறிக்கை விடக்கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் தான் ஆட்சியில் இருந்த காலத்தில் எதையாவது செய்துள்ளாரா என்றால் இல்லை.
அவரது ஆட்சியில் நடந்த சாதனைகள் என்பவை மூன்று தான்
* பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறை
* தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு
* கொடநாடு கொலை- கொள்ளை
இவை தான் அவரது ஆட்சியின் வேதனையான சாதனைகள்.
ஆனால் கடந்த ஓராண்டு காலத்தில் தி.மு.க அரசு செய்த சாதனைகள் என்பவை பத்தாண்டு காலத்தில் செய்யக் கூடிய அளவிலான சாதனைகள் ஆகும்.” இவ்வாறு பேசியிருந்தார்.