அதிமுக ஆட்சியில் இருந்த போது ஆவின் உட்பட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி 3.10 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதனையடுத்து ராஜேந்திர பாலாஜி தலைமறைவானதால் அவரை கைது செய்ய விருதுநகர் மாவட்ட காவல்துறை 9 தனிப்படை அமைத்து கடந்த டிசம்பர் 17ம் தேதி முதல் சல்லடை போட்டு தேடி வந்தனர்.
20 நாட்களாக தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் பதுங்கி இருந்தது தனிப்படையினருக்கு தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து நடு ரோட்டில் வைத்து ராஜேந்திர பாலாஜியை சுற்றி வளைத்த தமிழ்நாடு தனிப்படை போலிஸாரை அவரை கைது செய்தனர்.
ராஜேந்திர பாலாஜியை போலிஸார் கைது செய்த போது சாலையில் இருந்த கர்நாடக மக்கள் சிலர் ‘ஏதோ கடத்தல்காரர்கள் போல. சுற்றி வளைத்து பிடித்திருக்கிறார்கள்’ என கன்னட மொழியில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வட்டமடித்து வருகிறது.
இதனிடையே ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருப்பதற்கு உதவியாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக பொது செயலாளர் ராமகிருஷ்ணன், அவரது உறவினர் நாகேஷ், ஓசூரைச் சேர்ந்த ரமேர், விருதுநகர் அதிமுக தொழில்நுட்ப அணி பொருப்பாளர் என நால்வரும் கைது செய்யப்பட்டனர்.