ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 5 மர்ம மரணங்கள் ஏற்பட்ட நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் முறையாக விசாரணை நடத்தாமல் மரணங்கள் அனைத்தும் தற்கொலை, விபத்து என முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க கடந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
ஆனால் இவ்வழக்கில் பல மர்மங்கள் இருப்பதாகவும், இது குறித்து உண்மை வாக்குமூலத்தை அளிக்க வேண்டுமென கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த சயன் கூறிய நிலையில், இந்த விவகாரம் குறித்த வழக்கின் மறுபுலன் விசாரணை நடத்த ஆகஸ்ட் 13ஆம் தேதி உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் காவல்துறைக்கு அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து மேற்கு மண்டல ஐஜி சுதாகர் மேற்பார்வையில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத், துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ் ஆகியோர் 5 தனிப்படைகள் அமைத்து வழக்கு விசாரணையை தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் இவ்வழக்கு குறித்த 103 சாட்சிகள் பதிவு செய்யப்பட்டு , அதில் 45 சாட்சிகள் மட்டுமே விசாரணைக்கு போதும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் 45 சாட்சிகளை மட்டுமே விசாரணை நடத்திய நிலையில் மீதமுள்ள 58 நபர்களிடம் எவ்வித விசாரணையும் நடத்தப்படவில்லை.
மறுபுலன் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது வரை சயன், வாகன விபத்தில் உயிரிழந்த கனகராஜ் சகோதரர் தனபால், கொடநாடு கணினிப் பொறியாளர் தினேஷின் தந்தை போஜன், எஸ்டேட் மேலாளர் நடராஜன், குற்றச்செயலில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த 5 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. கடந்த மாதம் 17ம் தேதி முதல் இன்று வரை தனிப்படை போலிஸார் நடத்திய விசாரணையில் கொடநாடு கொலை கொள்ளை சம்பவத்தில் பல மர்ம முடிச்சுகள் அவிழ்ந்து உள்ளது.
கொடநாடு மர்மம் குறித்த கடந்த அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட விசாரணையில் காவல்துறையினர் 125க்கும் மேற்பட்ட தடையங்கள் சேகரிக்கப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்திருந்த நிலையில் தற்போது தனிப்படை போலிஸார் நடத்திய விசாரணையில் 69 மிக முக்கிய தடயங்கள் எதுவும் முறையாக இல்லையென தெரியவந்துள்ளது. அத்துடன் 103 சாட்சிகள் காவல்துறையினர் பதிவு செய்திருந்த நிலையில் , நீதிமன்றத்தில் பல சாட்சிகளை விசாரிக்க தேவையில்லை எனவும் 45 சாட்சிகளை மட்டும் விசாரித்தால் போதும் என காவல்துறை, அரசு தரப்பு வழக்கறிஞர்களும் அப்போது நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்கள்.
அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட கொடநாடு கொலை கொள்ளை விசாரணையில் பல்வேறு குழப்பங்கள் இருப்பதால் வழக்கை விசாரித்த அப்போதைய குன்னூர் துணை காவல் கண்காணிப்பாளர் , சோலூர் மட்டம் ஆய்வாளர் ஆகியோரை விசாரணை நடத்த தனிப்படை போலிஸார் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே எதிர்வரும் 1 ஆம் தேதி உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா முன்பு கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.