பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்த நாளை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். இப்படி இருக்கையில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை தேசிய வேலையின்மை நாளாக காங்கிரஸார் கடைப்பிடிக்கின்றனர்.
தான் ஆட்சிக்கு வந்தால் இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதாக கூறி வாக்குறுதி அளித்துவிட்டு அதனை மோடியும் அவரது அரசும் நிறைவேற்றாததை கண்டிக்கும் வகையில் நாடு முழுவதும் காங்கிரஸின் இளைஞரணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதனையொட்டி பக்கோடா விற்று இளைஞர் காங்கிரஸார் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பா.ஜ.கவும் மோடியும் தனது நண்பர்களுக்காக செயல்படாமல் மக்களுக்காகப் பணியாற்றி இருந்தால் இன்றைய நாளை வேலையின்மை நாளாக கடைபிடித்திருக்கத் தேவை இல்லை என்று காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. ட்விட்டரில் பதிவிட்டு சாடியுள்ளார்.
இதனிடையே டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் சார்பாக பேரணி நடத்தப்பட்டது. அப்போது ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பின்னர், சாஸ்திரி பவனை முற்றுகையிட முயன்றனர். அப்போது, முற்றுகை போராட்டத்துக்கு அனுமதி மறுத்து அவர்களைப் போலிஸார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.