அரசியல்

''அமைச்சரின் அறிவிப்பில் குளறுபடி செய்து வதந்தி பரப்புவதா?''-எழுத்தைக் கூட்டிப் படியுங்க தமிழ்தேசியர்களே!

அமைச்சரின் அறிவிப்புகளை அரைவேக்காட்டுத்தனமாக புரிந்து கொண்டு சமூக வலைதளங்களில் வதந்திகளை உலவிட்டு வருகின்றனர் தமிழ் தேசியர்கள் எனும் தமிழறியா அறிவிலிகள்.

''அமைச்சரின் அறிவிப்பில் குளறுபடி செய்து வதந்தி பரப்புவதா?''-எழுத்தைக் கூட்டிப் படியுங்க தமிழ்தேசியர்களே!
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்றையதினம் 2021-2022 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகளாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழர்கள் நலனை முன்னிறுத்தி எந்நாளும் பாடுபடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளில் தலையாய கொள்கையான தமிழ்மொழி வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய தேசம் முழுவதும் மக்கள் நலப்பணியில் முதலிடம் பிடித்துள்ள சாதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் சார்பில், தமிழ்தாய்க்கு மகுடம் சூட்டுவது போன்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்புகள் இருக்கின்றன என்று தமிழறிஞர்கள் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

'தீராக் காதல் திருக்குறள்' என்ற பெயரில், ஊடகங்கள் வாயிலாக தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதற்கென சிறப்பு நிதியாக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

அயல்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்குத் தமிழ் கற்பிக்க 'தமிழ் பரப்புரைக் கழகம்' உருவாக்கப்படும். இதற்கெனத் தொடர் செலவினமாக ரூபாய் 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

பள்ளி மாணவர்கள் தங்களின் தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், 'திறனறித் தேர்வு' நடத்தி ஆண்டுதோறும் 1,500 பேர் தெரிவு செய்யப்பட்டு இரண்டாண்டுகளுக்கு ஊக்கத் தொகையாக மாதம்தோறும் ரூபாய் 1,500 வழங்கப்படும்.

திருக்குறள் முற்றோதல் செய்து பரிசுத் தொகை வழங்காமல் நிலுவையில் உள்ள 219 மாணவர்களுக்கு இந்த ஆண்டு குறள் பரிசு வழங்கப்படும். அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 70 மாணவர்கள் என்ற உச்சவரம்பு நீக்கப்பட்டு, பரிசுத் தொகை உயர்த்தப்படும்.

தமிழ் அறிஞர்கள் சிலம்பொலி சு.செல்லப்பன், முனைவர் தொ.பரமசிவன், புலவர் இளங்குமரனார், முருகேச பாகவதர், சங்கரவள்ளி நாயகம் மற்றும் புலவர் செ.இராசு ஆகியோரின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டு, பரிவுத் தொகை வழங்கப்படும் என்பன உள்ளிட்ட 20 அறிவிப்புகள் தமிழ் மகளுக்கு அணிசேர்ந்துள்ளன.

இந்த அறிவிப்புகளில், சங்க இலக்கியங்களைச் சந்தி பிரித்து எளிமைப் பதிப்புகளாகவும், திராவிடக் களஞ்சியம் என்ற தொகுப்பு நூலையும் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் கூட்டு வெளியீடுகளாகக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கெனத் தொடராச் செலவீனமாக ரூபாய் 10 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அறிவிப்பு முத்தாய்ப்பானது.

இதை அரைகுறையாக புரிந்துகொண்ட அரைவேக்காட்டு தமிழ்தேசியர்கள் என்ற போர்வையில் உள்ள அறிவிலிகள், சங்கத் தமிழ் நூல்களுக்குத் திராவிடக் களஞ்சியம் என்று இனமறைப்புத் தலைப்புக் கொடுக்காதே, தமிழ்க் களஞ்சியம் என்றே வெளியிடு என்று இணையத்தில் கூப்பாடு போடத் தொடங்கியுள்ளனர்.

ஒரு அறிவிப்பினை படிக்கும்போது, அதில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்று புரிந்துகொண்டு பிறகு கருத்தினை வெளியிட வேண்டும். சங்க இலக்கியங்கள் சந்தி பிரிக்கப்பட்டு எளிமைப் பதிப்புகளாக வெளியிடப்படும் என்பது ஒரு பணி. திராவிடக் களஞ்சியம் வெளியிடப்படுவது வேறொரு பணி.

மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போன்று சங்க இலக்கியங்களுக்கும், திராவிடக் களஞ்சியத்திற்கும் முடிச்சுபோட்டு வதந்தி பரப்புவதை தமிழ் தேசியர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அனைத்து சாதியினரும் அச்சகர் ஆகலாம் என்று அறிவித்து, அனைத்து சாதி அர்ச்சகர்களையும் திருக் கோயில்களில் நியமித்து ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பையும் மீறி தமிழை கோயில் கருவறைக்குள் கொண்டு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஒப்பில்லா சாதனையை தமிழ் மக்கள், தமிழறிஞர்கள் போற்றிப் புகழ்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள், பாராட்ட திராணியற்றவர்கள், வதந்திகளை சமூக ஊடகங்களில் பரப்புவது வேண்டாத வெட்டிவேலை என்பது தமிழ்நாட்டோருக்கு நன்றாகவே தெரியும்.

இனியாவது அரசின் அறிவிப்புகளை எழுத்தைக் கூட்டி வாசியுங்கள் தமிழ் தேசியர்களே.

banner

Related Stories

Related Stories