அரசியல்

நீட்’டை எதிர்ப்பதாக கூறி இரட்டை வேடமிடும் அதிமுக என்ன செய்தது? மல்லாந்து படுத்து துப்பினால்.. - கி.வீரமணி

‘நீட்' எதிர்ப்புக் களத்தில் முதல் வெற்றி பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - இறுதிப் போரிலும் வெற்றி பெறுவார் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

நீட்’டை எதிர்ப்பதாக கூறி இரட்டை வேடமிடும் அதிமுக என்ன செய்தது? மல்லாந்து படுத்து துப்பினால்.. - கி.வீரமணி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘நீட்’ எதிர்ப்புக் களத்தில் முதல் வெற்றி பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதிப் போரிலும் வெற்றி பெறுவார்; காரணம், அவர் மக்கள் முதலமைச்சர் மட்டுமல்ல, ‘மடியில் கனமில்லாத’ மானமிகு முதலமைச்சர் என்பதே என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

‘நீட்’ மிகப்பெரிய மருத்துவக் கல்விக் கொல்லி!

‘நீட்’ தேர்விலிருந்து தமிழ்நாடு அரசு விலக்குப் பெறவேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ‘நீட்’ தேர்வு என்பது ஏழை, எளிய, கிராம அடித்தட்டு ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் உள்பட பலரது உயிரையும், உரிமையையும் பலி வாங்கி, தமிழ்நாட்டில் முன்போல ஏராளமான மருத்துவர்கள் வெளிவர முடியாத அளவுக்குத் தடை ஏற்படுத்திய மிகப்பெரிய மருத்துவக் கல்விக் கொல்லியாகும்!

1. கடந்த 4 ஆண்டுகாலத்தில், இத்தேர்வின் கேள்விகள் ஒன்றிய கல்வி முறையான சி.பி.எஸ்.இ. பாடங்களிலிருந்தே கேட்கப்பட்டன - பெரிதும்!

2. அடிப்படை அறிவியல் மற்ற பாடங்களை 11, 12 ஆம் வகுப்புகளைப் புறக்கணித்தே ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி என்ற பெயரில், கோச்சிங் சென்டர்களில் லட்சக்கணக்கான ரூபாய்களை செலவழித்து - அதுவும் முதல் முறையில் கூட இல்லாது, இரண்டாவது அல்லது மூன்றாவது முறை தேர்வடைந்தவர்களே அதிகம் என்பதும் மறுக்க முடியாத உண்மை!

3. கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு இது எட்டாத உயரம்; கிட்டாத கல்வி ஏற்பாடு என்பதும், தமிழ்வழி பயின்றவர்களுக்கு வாய்ப்புக் கதவு அறவே மூடப்பட்டது என்பதும் வெளிப்படையானது.

நீட்’டை எதிர்ப்பதாக கூறி இரட்டை வேடமிடும் அதிமுக என்ன செய்தது? மல்லாந்து படுத்து துப்பினால்.. - கி.வீரமணி

பொருளாதார நிபுணர்கள், மருத்துவ வல்லுநர்களால் பாராட்டப்பட்ட மாநிலம்!

4. தமிழ்நாட்டு மருத்துவக் கட்டுமான அடிப்படை - ‘திராவிட மாடல்’ ஆட்சியால் - இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தைவிடவும் தலைசிறந்ததாக அமைந்திருப்பதால், இது பன்னாட்டுப் பொருளாதார நிபுணர்கள், மருத்துவ வல்லுநர்களால்(அமர்த்தியாசென், ழீன் தெரசே) 2013 ஆம் ஆண்டே பாராட்டப் பெற்ற மாநிலம்.

5. இந்தியாவின் வேறு எந்த மாநிலத்தையும்விட, தமிழ்நாட்டில்தான் மாவட்டந்தோறும் அரசு மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட்டு, குறைந்த கட்டணத்தில் மாணவர்கள், ஒடுக்கப்பட்ட மாணவர்கள் படித்து முன்னேறி வருவது கண்கூடு!

இவ்வளவையும் திட்டமிட்டு ஒழித்துக் கட்டும் அரசமைப்புச் சட்ட உரிமைப் பறிப்பு ஏற்பாடே ‘நீட்’ தேர்வு என்ற ஒரு சூழ்ச்சித் திட்டமாகும்!

நுழைவுத் தேர்வுகளை கல்வி நிபுணர்களின் தேர்ந்த கருத்துக் கேட்டு, தனிச் சட்டமியற்றி 2007 இல் ஒழித்து, தொடர்ந்து பல ஆண்டுகள் பிளஸ் டூ மதிப்பெண் மற்ற ஏற்பாடுகள்மூலம் நடந்து வந்த தேர்வுகளில் வெற்றி பெற்ற மருத்துவர்கள் பலரும் மேற்பட்டப்படிப்பை இங்கே படித்தும், வெளிநாடுகளில் படித்தும் பிரபலங்களாக சாதித்துக் கொண்டு சரித்திரம் படைக்கிறார்கள்!

இந்த நிலையில், ‘நீட்’ தேர்வு திணிப்பை தமிழ்நாடு எதிர்த்த நிலையில், ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, இதே ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு விலக்கு அளித்ததா, இல்லையா?

அடுத்து அப்போது நடைபெற்ற உச்சநீதிமன்ற வழக்குகளில் - அதற்குப் பிறகு - ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கிராமப்புற மாணவர்களுக்கென தனியே விலக்கு தரும் பட்டியல் ஒன்றைத் தயாரிக்க மாநில அரசுக்குச் சொல்லி, உச்சநீதிமன்றமும் அதனை ஏற்று, பிறகு ஒன்றிய அரசு தனது கருத்தை மாற்றிக் கொண்டதும் நினைவூட்டப்படவேண்டிய பழைய நிகழ்வுகளாகும்!

ஒட்டுமொத்த தமிழ்நாடே ‘நீட்’ தேர்வை எதிர்த்து அணிவகுக்கும் நிலை!

இந்நிலையில், பா.ஜ.க. தவிர, ஒட்டுமொத்த தமிழ்நாடே ‘நீட்’ தேர்வை எதிர்த்து அணிவகுக்கும் நிலை உலகறிந்ததாகும்.

எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, இரண்டு மசோதாக்கள் ‘நீட்’ தேர்வுக்கு விலக்குக் கோரி நிறைவேற்றப்பட்டன. எதிர்க்கட்சிகள் தி.மு.க., காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகியவை ஒருமனதாக ஆதரித்தன.

அதை ஒன்றிய அரசின் ஆளும் கூட்டணியில் - என்.டி.ஏ. என்ற தேசிய முன்னணியில் இடம்பெற்றிருந்தும்கூட - பலமுறை - மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத நிலையில், அ.தி.மு.க. வாக்குகள்மூலம் ஒன்றிய அரசின் மசோதாக்கள் நிறைவேற ஒத்துழைப்பு போன்ற பல அரிய வாய்ப்புகளை - கையில் வெண்ணெய்போல் இருந்தும் - அதை நெய்யாக்க மனமில்லாத அடிமை முறி எழுதிய ஆட்சியாகவே எடப்பாடி தலைமையிலான ஆட்சி இருந்தது - வற்புறுத்தவே இல்லை.

காரணம், ‘மடியில் கனம் - பிடியில் இவர்களது குடுமி’ என்ற நிலையே!

மசோதாக்கள் திருப்பி அனுப்பியதைக்கூட அ.தி.மு.க. அரசு சட்டமன்றத்திற்கே மறைத்து, நீதிமன்றங்கள்மூலம் இந்த ‘தோல்வி’ பகிரங்கமானது! என்ன காரணங்கள் என்று கேட்கும் துணிவும் இல்லாத ஆட்சியாக அ.தி.மு.க. ஆட்சி நடந்தது!

அதன்பின்னரும் தொடர்ந்த இரட்டை வேடம், ‘நீட்’ தேர்வை ‘எதிர்க்கிறோம்‘ என்று கூறிக்கொண்டே ஒவ்வொரு ஆண்டும் அதற்கான கதவுகளை அ.தி.மு.க. அரசு திறப்பதில் சற்றும் கூச்சப்படவேயில்லை.

கண்ணாடி வீட்டிலிருப்பவர்கள் கற்கோட்டைமீது கல்லெறியும் ‘புத்திசாலித்தனம்!’

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக உள்ள எடப்பாடியார் அறிக்கை விடுகிறார்; ‘நீட்’ தேர்வை ஒழிப்பதாக தி.மு.க. சொன்ன தேர்தல் வாக்குறுதியை ஏன் உடனடியாக செயல்படுத்தவில்லை என்று!

கண்ணாடி வீட்டிலிருப்பவர்கள் கற்கோட்டைமீது கல்லெறியும் ‘புத்திசாலித்தனம்‘ இது!

ஆட்சிக்கு வந்து 68 நாள்களுக்குள்ளாக ‘நீட்’ தேர்விலிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற முறைப்படி - ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், மருத்துவ நிபுணர்கள், கல்வி நிபுணர்கள் குழுவை நியமித்து, அக்குழு 35 நாள்களில் 165 பக்க அறிக்கையை முதலமைச்சரிடம் அளித்து, அவரது சட்டப் பரிசீலனையில் ஆளுமை நடக்கிறதே - எதிர்க்கட்சித் தலைவர் அறியமாட்டாரா? பல கட்டங்கள் தாண்ட வேண்டாமா?

இதற்கிடையில் ‘நீட்’ தேர்வின் தாக்கம் - பாதிப்புப்பற்றி இப்படி ஆராயவே குழு நியமித்தது, செல்லாது என்று அறிவிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ஜ.க. ஒரு பொதுநல வழக்குப் போட்டு தடை கேட்டதே - ‘நீட்’ தேர்வினை எதிர்ப்பதாக உதட்டளவில் கூறிக்கொண்டு, உள்ளூர் பா.ஜ.க.விடம் சரணாகதி அடைந்து கிடக்கும் அ.தி.மு.க.வின் முன்னாள் முதலமைச்சரும், அவரது கட்சியும், அதில் எடுத்த நிலைப்பாடு என்ன?

மற்ற கட்சிகள் முன்வந்தபோது, பா.ஜ.க. மனுவை எதிர்த்து ஏன் இணைய முன்வரவில்லை?

‘நீட்’டை எதிர்ப்பதாகக் காட்டிக்கொள்ளும் இரட்டை வேடதாரியான அ.தி.மு.க. என்ன செய்தது?

அவ்வழக்கை எதிர்த்து சுமார் 27 முக்கிய கட்சிகள், அமைப்புகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்களை இணைத்துக் கொள்ள (Implead) கிளர்ந்தெழுந்தன. அதில் ‘நீட்’டை எதிர்ப்பதாகக் காட்டிக்கொள்ளும் இரட்டை வேடதாரியான அ.தி.மு.க. என்ன செய்தது? கேள்வி கேட்க அதற்குத் ‘தார்மீக’ உரிமை உண்டா?

100 சதவிகித இடங்களைத் தாரை வார்த்துவிட்டு, அரசு பள்ளிகளில் 7.5 சதவிகிதம் பிச்சை கேட்டு வாங்குவதுபோல வாங்கினால், போதுமானதா?

மல்லாந்து படுத்து எச்சில் துப்பினால், அது அவர்கள் மார்புமீதுதான் விழும் என்பதுகூட புரியாதா?

முந்தைய நுழைவுத் தேர்வு எதிர்ப்புப் போராட்டம் பல ஆண்டு தொடர் போராட்டத்திற்குப் பின்புதான் வெற்றி கிடைத்தது - களத்தில் முதல் வெற்றி, இறுதிப் போரிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெறுவார். காரணம், அவர் மக்கள் முதலமைச்சர் மட்டுமல்ல; மடியில் கனமில்லாத ‘மானமிகு’ முதலமைச்சர் என்பதை மறக்க வேண்டாம்!

banner

Related Stories

Related Stories