வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட 20 சதவீத இட ஒதுக்கீடு என்பது தற்காலிகமானது என அ.தி.மு.க அமைச்சர் பேசியது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் அ.தி.மு.க அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அமைச்சர் ஆர்.பி உதயகுமார், “வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட 20 சதவீத இட ஒதுக்கீடு தற்காலிகமானது, மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்து கொண்டிருக்கிற காரணத்தால், ஆறுமாதத்திற்கு தற்காலிகமாக மசோதாவாக இருக்கும்.
68 சமுதாயத்தினருக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு என்றும் சில குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டும் 10.5 சதவீத இடஒதுக்கீடு என்றும் இதர சமுதாயத்திற்கு 2.5% என்று சிலர் கூறுகின்றனர்.
சத்தியம் செய்து சொல்கிறேன்; இது உண்மை அல்ல. மீண்டும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில்தான், இடஒதுக்கீடு வழங்கப்படும்.” எனப் பேசிர்.
ஒருபுறம், வட மாவட்டங்களில் அ.தி.மு.க அமைச்சர்களும், பா.ம.க-வினரும் வன்னியர் சமூகத்தினருக்கான 10.5% இட ஒதுக்கீடு குறித்து பேசிவரும் நிலையில், தென் மாவட்டங்களில் அ.தி.மு.க அமைச்சரே முரணாகப் பேசியிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை கருத்தில்கொண்டு வாக்குகளைக் கவர்வதற்காக அ.தி.மு.க-வினர் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என மக்கள் புலம்பி வருகின்றனர்.