மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அவிநாசி சட்டமன்ற தொகுதி (தனி) வேட்பாளர் அதியமானை அறிமுகம் செய்து வைத்து தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினருமான ஆ.ராசா சிறப்புரையாற்றினார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பாக ஆதித்தமிழர் பேரவை நிறுவனரும் தலைவருமான அதியமான் போட்டியிடுகிறார். இந்நிலையில், கூட்டணிக் கட்சியினரிடையே வேட்பாளரை அறிமுகம் செய்து தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் விதமாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்ட செயல்வீரர்கள் கூட்டம் இன்று அவிநாசியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான ஆ.ராசா கலந்துகொண்டு நிர்வாகிகள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “தமிழக அரசியல் மாற்றத்தை நோக்கி இந்த தேர்தல் சென்றுகொண்டிருக்கிறது. அவிநாசியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் மீது வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பரப்பி சாதிவெறியை தூண்டி வெற்றியை பறித்துவிடலாம் என எண்ணுகிறார்கள். உண்மையாகவே சொல்கிறேன், அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதி நல்ல ஒரு சட்டப்பேரவை உறுப்பினரை பெறப்போகிறது.
தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் இந்தத் தொகுதியில் என்னென்ன தேவைகள் இருக்கிறதோ அத்தனை தேவைகளையும் அவிநாசி தொகுதியில் வெற்றி பெற இருக்கின்ற தி.மு.க கூட்டணி வேட்பாளர் அதியமானும், மக்களவை உறுப்பினரான நானும் ஒன்றிணைந்து நிச்சயமாக நிறைவேற்றுவோம்.
23 வயதில் மிசாவை எதிர்த்து சிறைக்கு சென்றவர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். பிரதிநிதியாக தொடங்கி பொதுக்குழு உறுப்பினர் செயற்குழு உறுப்பினர் என படிப்படியாக இளைஞரணி செயலாளர் துணை பொதுச் செயலாளர் பொருளாளர் செயல் தலைவர் கட்சியின் ஆற்றல் மிகு தலைவர் என தி.மு.கவில் தன்னுடைய உழைப்பால் உயர்ந்து உள்ளாட்சித்துறை அமைச்சராக துணை முதல்வராக பணியாற்றிய பெருமைக்குரியவர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
தற்போது மக்களுக்கான ஆட்சியை தந்திட தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார. ஆனால் எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏக்களை கூவத்தூர் பங்களாவிலேயே அடைத்துவைத்து சாராயத்தை ஊற்றிக் கொடுத்து முதல்வரானார். நாம் சொல்லவில்லை. அ.தி.மு.க அமைச்சர் சண்முகநாதன் சொல்கிறார். ஜெயலலிதா ஆட்சி நடத்துவதாகச் சொல்கிறார் பழனிச்சாமி. ஜெயலலிதாவிற்கு இரு முகங்கள் இருக்கிறது, ஒன்று துணிச்சல் மிக்க தமிழக உரிமைகளை விட்டுக்கொடுக்காமல், நீட் தேர்வு, உதய் மின் திட்டம் உள்ளிட்டவற்றை அனுமதிக்காத முகம். ஆனால், பழனிசாமி நீட் தேர்வை அனுமதித்தது, உதய் திட்டத்திற்கு ஆதரவு தந்தது என மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்துவிட்டார்.
ஜெயலலிதாவின் இன்னொரு முகம், ஊழல் செய்தவர் என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்து தண்டனை வழங்கிய அந்த முகம். பழனிசாமி அதுபோன்ற ஆட்சிதான் நடத்திவருகிறார். நடத்தப்போவதாகவும் சொல்கிறார். ஊழல் செய்து பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக உள்ளார்கள்.
பழனிச்சாமி ஆட்சியில் செய்த நல்ல விஷயங்கள் என்பவை, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தவைகளை உடனடியாகச் செய்ததுதான். எனவே மதச்சார்பற்ற ஊழலற்ற ஆட்சி அமைய உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்.” எனப் பேசினார்.