இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டை எந்த விதத்திலும் நீர்த்துப் போகச் செய்யாமலும் சமூக நீதியை முழுமையாக அமலாக்க வேண்டும் என உரத்து முழங்குவதிலும் அதற்கான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்றென்றும் உறுதியோடு நிற்கிறது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஜூலை 31 வெள்ளியன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “கோவிட் 19 தொற்று பரவியுள்ள இக்காலத்தில், தாங்களும் தங்களது குடும்பத்தினர் மற்றும் சக தோழர்களும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். தொற்று பரவல் தொடர்பாக சென்னையிலிருந்து வரும் தகவல்கள் மிகவும் கவலையளிப்பவையாக உள்ளன. எனவே தாங்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
ஜூலை 29 அன்று நாம் தொலைபேசியில் உரையாடிய பிறகு, தங்களது கடிதமும் கிடைக்கப்பெற்றேன். இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்; எனது பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மனுத்தாக்கல் செய்திருந்தது என்பதை தாங்கள் அறிவீர்கள். வழக்கின் தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. உயர்நீதிமன்றம் அளித்துள்ள வழி காட்டுதலின்படி, தீர்ப்பில் கூறப்பட்டுள்ள அம்சங்களை தாமதமின்றி விரைவில் நிறைவேற்றுவதற்கு ஒரு குழுவினை அமைக்குமாறு மத்திய அரசை நாம் வலியுறுத்தவேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
ஜூலை 25, 26 தேதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் இணையவழி நடைபெற்றது. அக்கூட்டத்தில், “பட்டியலினத்தவர்/பழங்குடியினர்/இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இட ஒதுக்கீடுகளை கறாராக அமல்படுத்த வேண்டும்; பின்னடைவு பணியிடங் களை நிரப்பிட வேண்டும்” என்று மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
சமூக நீதியை நிலைநாட்டுவதிலும், இடஒதுக்கீடுகளை எந்த விதத்திலும் நீர்த்துப் போகச் செய்யாமலும் அமலாக்க வேண்டும் என வற்புறுத்துவதிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு உறுதிப்பாட்டோடு இருக்கிறது; இந்த இலக்கை அடைவதற்கான பயணத்தை ஓய்வின்றி மார்க்சிஸ்ட் கட்சி தொடரும் என நான் உறுதியளிக்கிறேன். இத்தகைய இலக்குகளை எட்டு வதற்காக வலுவான ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.