தமிழகத்தில் மத கலவரத்தை ஏற்படுத்த சங்-பரிவார் மற்றும் இந்துத்வா கும்பல் முயற்சித்து வருகிறது. குறிப்பாக, அண்மைக் காலமாக அ.தி.மு.க. ஆட்சியில் தந்தை பெரியார் அவர்களின் உருவச் சிலைகள் தகர்க்கப்படுவதும், தாக்கப்படுவதும், சிதைக்கப்படுவதும், இழிவு செய்யப்படுவதும் தொடர் நிகழ்வாகவே நடந்து வருகிறது.
சமீபத்தில் பெரியார் சிலை மீது காவிச் சாயம் ஊற்றப்பட்டது. கோவை சுந்தராபுரம் பகுதியில், திராவிடர் கழகம் நிறுவிய தந்தை பெரியார் சிலை மீது காவி சாயத்தைப் சில சமூக விரோத சக்திகள் இழிவு செய்தன. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திராவிட இயக்கங்கள் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பெரியாரின் சிந்தனைகளை முன்னிறுத்தி முழக்கமிட்ட அவர்கள், பெரியாரின் சிலையை அவமதித்தவர்களை கண்டறிந்து உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், தந்தை பெரியார் சிலையை அவமதித்திய பாரத் சேனா அமைப்பை சேர்ந்த அருண் கிருஷ்ணன் என்பவர் போத்தனூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இதனையடுத்து நீதிமன்ற காவலில் சிறையில் உள்ள அருண் கிருஷ்ணன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதால் ஓராண்டு சிறையில் அடைக்க கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.