தமிழகத்தில் மத கலவரத்தை ஏற்படுத்த சங்-பரிவார் மற்றும் இந்துத்வா கும்பல் முயற்சித்து வருகிறது. குறிப்பாக, சமீபத்தில் பெரியார் சிலை மீது காவிச் சாயம் ஊற்றப்பட்டது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திராவிட இயக்கங்கள் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கோவை ரயில் நிலையம் முன்பு உள்ள கோயில் மற்றும் டவுன்ஹால் பதியில் உள்ள கோயிலின் முன்பகுதியில் டயரில் தீயைக் கொளுத்தி சிலர் வீசிச் சென்றுள்ளனர். கோவையில் அடுதடுத்து மூன்று கோயில்களில் தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோவை போலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
விசாரணையில் கோயிலில் தீ வைத்தது தொடர்பாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவரை போலிஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கஜேந்திரன் அடிக்கடி வீட்டில் சண்டையிட்டு சில பொருட்களை சாலையிலேயே எரிப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் அவரை மனநல சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சிகிச்சையில் இருந்த கஜேந்திரன் கடந்த 14ம் தேதி மருத்துவமனையில் இருந்து தப்பி மீண்டும் வீட்டிற்குச் சென்று சண்டையிட்டுள்ளார். அப்போது வீட்டின் முன்பு சில பொருட்களை எரித்துவிட்டு அங்கிருந்து கிளம்பி கோவை வந்து கோயிலின் முன்பு டயரைக் கொளுத்தியுள்ளார்.
இதனை கஜேந்திரனே ஒப்புக்கொண்டதாக போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனை உறுதி செய்யும் வகையில் கோவை மாவட்ட எஸ்.பி வெளியிட்டுள்ள பதிவில், “நேற்று கோவை மாநகரில் மூன்று கோவில்கள் அருகில் மர்ம நபர் டயர் மற்றும் உபயோகமற்ற பொருட்களை தீயிட்டு எரித்த சம்பவம் தொடர்பாக கஜேந்திரன் (48) என்பவரை இன்று கோவை மாநகர காவல் துறையைச் சேர்ந்த சிறப்பு படையினர் பிடித்தனர். இவர் எந்த அமைப்போ கட்சியோ சாராதவர் என்பது குறிப்பிடத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தொடர்ந்து பல்வேறு மதமோதல்களை உண்டாக்கும் வகையில் கருத்துத் தெரிவிக்கும் பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா இந்த விவகாரத்தில் நடத்தும் பெரியார் திராவிடர் கழகத்தினர் ஈடுபட்டதாக பொய்யான குற்றச்சாட்டை பகிர்ந்துள்ளார். எச்.ராஜாவின் பதிவு இரு பிரிவினரிடையே திட்டமிட்டு மோதலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளதாக பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மேலும் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணனை தொடர்புபடுத்தி பொய்ச் செய்தி பரப்பியதற்காக எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்ககோரி தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் கோவை ஆணையாளரிடம் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.