துக்ளக் பத்திரிகையின் 50வது ஆண்டு விழாவில் தந்தை பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்து சர்ச்சைக்குள்ளானது.
அந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், 1971-ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மூட நம்பிக்கை ஒழிப்பு பேரணியின்போது, ராமர் மற்றும் சீதையின் உருவப்படங்கள் நிர்வாணமாக எடுத்துவரப்பட்டதாகவும், செருப்பால் அடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தந்தை பெரியார் பங்கேற்ற நிகழ்வு குறித்து ரஜினி அவதூறான கருத்துகளை தெரிவித்த நிலையில், அவர் வரலாறு தெரியாமல் பேசுகிறார் என்றும் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பெரியாரிய ஆதரவாளர்களும், பல்வேறு இயக்கத்தினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, நேற்று போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், இல்லாததை ஒன்றும் சொல்லவில்லை என்றும், நடந்ததைத் தான் கூறினேன் எனவும் அதற்கு ஆதாரமாக 2017ம் ஆண்டு அவுட்லுக் இதழில் வந்த ஒரு கட்டுரையையும் சுட்டிக்காட்டினார்.
மேலும், தான் இதற்காக மன்னிப்பு கேட்கமுடியாது என்றும் தெரிவித்தார். இதையடுத்து, இதை ஒரு ஆதாரமாகக் காட்டுவதா என ரஜினிக்கு கண்டனங்கள் எழுந்தன. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
குறிப்பிட்ட இந்த நிகழ்வு குறித்து தவறான செய்தி வெளியிட்டதற்காக, அப்போதைய காலகட்டத்திலேயே இந்து குழுமம் நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளான நிலையில், தவறான பத்திரிகை செய்தியை ஆதாரமாகக் கொண்டு கருத்துச் சொன்ன ரஜினிக்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ரஜினிகாந்த் குறித்து பல்வேறு காலகட்டங்களில் செய்தித்தாள்களில் வெளிவந்த செய்திகளை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.