தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையின் நேரமில்லா நேரத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு ஏற்றவாறு இல்லை எனத் தெரிவித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேச சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதையடுத்து, தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
அப்போது அவர் பேசியதாவது, “கடந்த ஜனவரி 2 அன்று, சட்டப்பேரவைத் தலைவருக்கு நான் ஒரு கடிதம் அனுப்பியிருந்தேன். அதில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியிருந்தேன். அதுகுறித்து எந்த தகவலும் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தைப் பயன்படுத்தி குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என சபாநாயகரிடம் கேட்டேன். சட்டப்பேரவை இன்னும் இரண்டு நாட்களில் முடிவடையவிருப்பதால் இதுகுறித்து விளக்கவேண்டும் என்றேன்.
இந்தியா முழுவதும் பேரணிகள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதனால், கலவரம், துப்பாக்கிச் சூடு போன்றவை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆகவே, இதை முக்கிய பிரச்னையாகக் கருதி விவாதத்தை எழுப்பியதற்கு சபாநாயகர் அனுமதி தரவில்லை.
கேரளா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப், டெல்லி, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை முழுமையாக எதிர்த்து வருகிறார்கள். பா.ஜ.க ஆளும் அசாம் மாநிலத்தில் கூட அம்மாநில முதல்வர் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
சட்டத் திருத்தத்திற்கு ஆதரவளித்து வாக்களித்திருந்தாலும் கூட ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் தங்கள் மாநிலங்களில் அமல்படுத்தமாட்டோம் என அறிவித்திருக்கிறார்கள்.
ஆனால், தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க, சட்டத் திருத்தத்தை ஆதரித்து வாக்களித்து உள்ளது. இப்போதும், அதை எதிர்க்காமல் பா.ஜ.கவிற்கு அடிமையாக, சேவகம் செய்து கொண்டிருக்கிறது அ.தி.மு.க அரசு. இதைக் கண்டித்து நாங்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தோம்.” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து மீண்டும் சட்டப்பேரவைக்குள் சென்றார் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.