தமிழகத்தின் 27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் தி.மு.க கூட்டணி வெற்றிபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட முயன்ற அ.தி.மு.க-வினர் சேர்மன் பதவிகளைக் கைப்பற்றுவதிலும் குறுக்குவழிகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
ஒன்றிய குழுத் தலைவர் மற்றும் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பதவிகளைக் கைப்பற்றுவதற்காக மாற்றுக் கட்சி கவுன்சிலர்களையும், சுயேச்சை கவுன்சிலர்களையும் கடத்த முயற்சித்துள்ளனர் அ.தி.மு.க-வினர்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஒன்றியத்தில் 12 ஒன்றிய கவுன்சில் வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க - 5, காங்கிரஸ் - 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 1, அ.தி.மு.க - 3, பா.ஜ.க - 1 என கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர்.
தி.மு.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்களைச் சேர்ந்த கவுன்சிலர்கள் இணைந்து தி.மு.கவை சேர்ந்தவரை சேர்மனாக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் மூன்று கவுன்சிலர்களைக் கொண்ட அ.தி.மு.கவினர் தி.மு.க கூட்டணி கவுன்சிலர்களை கடத்தி சேர்மன் பதவியைக் கைப்பற்ற குறுக்குவழியில் முயற்சித்து வருகின்றனர்.
முதற்கட்டமாக தே.மு.தி.கவில் இருந்து விலகி, தி.மு.கவில் இணைந்து கவுன்சிலராரான ஜெகநாதனை 25 லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கினர். தொடர்ந்து தி.மு.க கவுன்சிலர்களின் குடும்பங்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்க முயற்சித்தனர்.
இந்நிலையில் இன்று பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வந்த தி.மு.க கவுன்சிலர் ராம்சிங் என்பவரை கடத்த முயன்றபோது அங்கு வந்த தி.மு.க மாவட்ட செயலாளர் மனோ தங்கராஜ் தடுத்து நிறுத்தினார். அங்கு வந்த போலிஸாரிடம் தி.மு.க கவுன்சிலர்களை அ.தி.மு.க-வினர் கடத்த முயற்சிப்பதாக புகார் அளித்தனர்.
இதேபோல, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றிய சேர்மன் பதவியைக் கைப்பற்றும் போட்டியில், அ.தி.மு.கவினர் காங்கிரஸ் வேட்பாளரை கடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றிய சேர்மன் பதவியைக் கைப்பற்ற ஆவின் சேர்மன் வேலஞ்சேரி சந்திரன், ஒன்றிய செயலாளர் கண்டிகை ரவி ஆகிய இருவரும் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பதவியேற்க வந்த காங்கிரஸ் கவுன்சிலர் கலைச்செல்வி என்பவரை சந்திரன் கோஷ்டியினர் காரில் கடத்த முயற்சி செய்துள்ளனர்.
இதையறிந்த கண்டிகை ரவி ஆதரவாளர்கள், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காங். கவுன்சிலரை கடத்த முயன்றுள்ளனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் காங்கிரஸ் கவுன்சிலரை மீட்டு வீட்டில் ஒப்படைத்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றிய தி.மு.க பெண் கவுன்சிலரை கடத்தியதாக, அவரது கணவர் அளித்த புகாரின் பேரில், அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் முனியசாமி பாண்டியன் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.