பா.ஜ.க இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் சிறுபான்மையினர் மீதான அச்சுறுத்தல் தொடர்ந்து வருகிறது. இஸ்லாமியர்களின் உணவு, கலாசாரம் ஆகியவற்றை முன்வைத்து வன்முறைகளைத் தூண்டி வருகிறது பா.ஜ.க அரசு.
தற்போது, குடியுரிமை சட்டத் திருத்தத்திலும், இஸ்லாமியர்களை புறக்கணித்து, சிறுபான்மையினர் மீதான தம் வெறுப்பைக் காட்டியுள்ளது பா.ஜ.க அரசு. அப்பட்டமாக இஸ்லாமியர் வெறுப்பை அரங்கேற்றி வரும் பா.ஜ.க அரசுக்கு எதிராக நாடு முழுவதும் தீவிரமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தி.மு.க இளைஞரணி சார்பில் கடந்த டிசம்பர் 13ம் தேதி குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற நிலையில், நேற்று தமிழகம் முழுக்க தி.மு.க சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், கொண்டுவந்த பா.ஜ.க அரசிற்கு எதிராகவும், ஆதரவளித்து துரோகமிழைத்த அ.தி.மு.க அரசுக்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், சிறுபான்மையினர் உரிமைகள் தினமான இன்று, சிறுபான்மையினர் நலன் காக்க வலியுறுத்தியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சமூகநீதி-சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட திராவிட இயக்கத்தின் உயரிய நோக்கங்களில் ஒன்று, மத- இன-மொழி-பாலினம் என அனைத்து சிறுபான்மையினர் உரிமைகளையும் நலன்களையும் காப்பது!
சிறுபான்மையினர் உரிமைகள் தினமான இன்று, குடியுரிமைச் சட்டத்தின் மூலம் ஒடுக்கப்படும் சிறுபான்மையினரின் உரிமைகளை காத்திட உறுதியேற்போம்!” எனத் தெரிவித்துள்ளார்.