சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “நாங்குநேரி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக தி.மு.க கூட்டணிக்கு வாக்கு சேகரித்து வருகிறோம். 14ம் தேதிக்குப் பிறகு தி.மு.க மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளேன். அதற்கான தேதி விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிகிறது. மத்திய அரசு அதற்கான அனுமதியை வழங்காது என நம்புகிறோம்.
மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இந்த விவகாரத்தில் தமிழக அரசு விழிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இது தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும் தமிழகத்திற்கு எதிராக மத்திய அரசு பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளது” எனக் குறிப்பிட்டார்.
மேலும், “இடைத்தேர்தல்களைப் பொறுத்தவரை ஆளும் கட்சியினர் எப்போதுமே வெற்றிபெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார்கள். விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளில் அப்படி ஆளுங்கட்சியினர் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இருந்தபோதிலும் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியே வெற்றி பெறும்.
அம்பேத்கரின் சிலை அவமதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து வருகிறது. அதனை தமிழக அரசு வேடிக்கை பார்த்து வருவது சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக முடிந்துவிடும். உலக நாடுகள் மதிக்கும் அம்பேத்கரை தமிழகத்தில் தொடர்ந்து அவமதித்து வரும் போக்கு தலைதூக்கி இருக்கிறது. இதுபோன்று தலைவர்கள் சிலையை அவமதிப்பதை தடுக்க முதல்வர் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கீழடியை நேரில் சென்று ஆய்வு செய்தேன். தமிழினத்தின் தொன்மை வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. உலக அரங்கில் தமிழனுக்கு தலை நிமிர்வு ஏற்பட்டுள்ளது.
கீழடியைச் சுற்றியுள்ள 110 ஏக்கரில் பல்வேறு புதைபொருள்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது அடுத்தடுத்த ஆய்வுகளை மேற்கொண்டு, தமிழக அரசு இதில் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்'' எனத் தெரிவித்தார்.