அரசியல்

“அனைத்து இடங்களிலும் இந்துத்துவத்தை நுழைக்கப் பார்க்கும் பா.ஜ.க அரசு” - வைகோ கண்டனம்!

“மத்திய அரசு பொறுப்பேற்று நூறு நாட்களில், அனைத்து இடங்களிலும் இந்துத்துவத்தை நுழைக்கப் பார்க்கிறது” என வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

 “அனைத்து இடங்களிலும் இந்துத்துவத்தை நுழைக்கப் பார்க்கும் பா.ஜ.க அரசு” - வைகோ கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சென்னை விமான நிலையத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :

“மத்திய அரசு பொறுப்பேற்று நூறு நாட்களில், அனைத்து இடங்களிலும் இந்துத்துவத்தை நுழைக்கப் பார்க்கிறது. பகவத்கீதையை பொறியியல் பாடத்தில் கொண்டு வருவது என்பது திட்டமிட்ட இந்துத்துவ நுழைப்பிற்கான முயற்சி. இது விருப்பப்பாடம் என இருக்கக்கூடாது. இந்தத் திட்டம் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும்.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில், தத்துவ இயல் பாடத்தின் கீழ் பகவத் கீதையை ஒரு பாடமாகப் படிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து இருப்பது மிகப்பெரிய தவறாகும். பொறியியல் மாணவர்கள் பகவத் கீதையைப் படிக்க வேண்டிய அவசியம் என்ன? சமஸ்கிருதத்தையும், இந்தியையும் திணிக்கும் அதே குறிக்கோளோடு, அனைத்தையும் இந்துத்துவா மயமாக்கும் கொடிய நோக்கத்தோடு மத்திய அரசு செயல்படுகிறது.

இது திட்டமிட்ட இந்துத்துவா திணிப்பு. இது விருப்பப் பாடம் என்று சொல்லி மழுப்ப முடியாது. இந்தத் திட்டத்தை அடியோடு கைவிட வேண்டும்.

ஆறு விமான நிலையங்களைத் தனியார் மயமாக்குவதற்கான பணிகளை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இரயில்வே துறையைத் தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பது மிகப்பெரிய ஆபத்து. சேவைத் துறையை வர்த்தகத்துறை ஆக்குகிறார்கள். இதனால் பயணிகள் கட்டணம், சரக்குக் கட்டணம் உயர்வது மட்டுமல்ல, அனைத்துப் பொருள்களின் விலைவாசி ஏற்றத்துக்கும் காரணமாகிவிடும். இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்.

ஏற்கனவே பொருளாதாரம் மிகவும் மந்த நிலையில் இருக்கிறது என்று மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் கூறி இருக்கிறார். நிதி ஆயோக் துணைத் தலைவரும், 70 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மந்த நிலை, தேக்க நிலை ஏற்பட்டிருக்கிறது என்று கூறுகிறார். நூறு நாட்களில் மக்களுக்கு வேதனைதான் மிகுந்திருக்கிறதே தவிர, மோடி அரசு சாதித்தபடியாக எதுவும் இல்லை.

பா.ஜ.க. அரசு தங்களுடைய இந்துத்துவா கொள்கைகளைத் திணிப்பதற்கு முயல்கிறது. இப்படிச் செயல்படுவதால் எல்லா இடங்களிலும் தானாக எதிர்ப்பு உருவாகும். இந்துத்துவா போக்கைக் கைவிட வேண்டும் என்று மத்திய அரசை நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

மேலும், “பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக கேரள முதல்வர்கள் நேற்று திருவனந்தபுரத்தில் சந்தித்து இருக்கின்றனர். இரண்டு மாநிலங்களுக்கு இடையே உள்ள நதிநீர் பிரச்னைகள் குறித்துப் பேசி இருக்கின்றனர். ஆனால், செண்பகவல்லி தடுப்பு அணை குறித்துப் பேசியதாகத் தகவல் இல்லை.

செண்பகவல்லி தடுப்பு அணை உடைப்பைச் சீர்படுத்துவதற்காக ம.தி.மு.க-வின் சார்பில் இரண்டு முறை உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தி இருக்கிறோம். செண்பகவல்லி தடுப்பணை உடைப்பைச் சீர்படுத்தவும், தமிழக அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்," என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories