மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6ம் வகுப்பு மாணவர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் பட்டியலின சமூகத்தினரையும், இஸ்லாமிய சமூக மக்களையும் இழிவுபடுத்தும் வகையில் சில கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், மாதிரி வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளில் தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள் பற்றி தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தன. இதற்கு சமூக வலைதளத்தில் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ ஆறாம் வகுப்பு வினாத்தாளில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய கேள்விக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சாதி பாகுபாட்டையும் வகுப்புவாதத்தையும் பரப்பும் கேள்விகள் கேந்திரிய வித்யாலயா ஆறாம் வகுப்புத் தேர்வில் இடம்பெற்றிருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தேன். இப்படிப்பட்ட கேள்விகளை இடம்பெறச் செய்தவர்கள் விசாரிக்கப்பட்டு உரிய சட்டங்கள் மூலம் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
''சிறுபான்மை மக்களையும், தலித் மக்களையும் இழிவுபடுத்தி, பள்ளி மாணவர்களின் இளம் நெஞ்சில் நச்சுக் கருத்துகளைப் புகுத்தியுள்ள கேந்திரிய வித்யாலயா நிர்வாகத்திற்கு கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், வினாத்தாள்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்'' என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க அரசின் வகுப்புவாத, வர்ணாசிரம கொள்கையை மாணவர்களிடத்தில் புகுத்துவதற்கான திட்டமிடப்பட்ட முயற்சியாகவே இதைப் பார்க்கமுடிகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற கேள்விகள் குழந்தைகளின் மாணவப் பருவத்திலேயே சாதி மத ரீதியான பிரிவினையை ஊக்கப்படுத்தவே செய்யும் என்று கல்வியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.