3 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் ட்ரம்பை சந்தித்துள்ளார். அப்போது ஜி20 மாநாட்டின்போது இந்திய பிரதமர் மோடியை சந்தித்த போது அவர் காஷ்மீர் பிரச்னையில் சமரசம் செய்ய தன்னிடம் வலியுறுத்தியதாக இம்ரான் கானிடம் ட்ரம்ப் தெரிவித்தார்.
ட்ரம்பின் இந்தப் பேச்சு சர்வதேச அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்புத் தெரிவித்திருந்தார். அதேபோல், அமெரிக்க அரசும் ட்ரம்பின் இந்தப் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்திருருந்தது.
இதனையடுத்து, ட்ரம்பின் பேச்சுக்கு அரசு தரப்பில் இருந்து மட்டுமே மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி வாயைத் திறக்கவேயில்லை. எனவே அவர் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். மேலும், பல்வேறு அரசியல் தலைவர்களும் ட்ரம்பின் காஷ்மீர் விவகார பேச்சு குறித்து மோடி பதலளிக்கவேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி வாய் திறக்காமல் மௌனம் சாதிப்பது குறித்துப் பதிவிட்டிருந்தார். அதில், “கடந்த 5 ஆண்டுகால ஆட்சியின் போது ஒரு முறை கூட எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு மோடி பதிலளிக்கவில்லை.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் போது கூட பத்திரிகையாளர்களை சந்தித்த போதும் அமித்ஷாவே பெரும்பாலும் பதிலளித்தார். அப்படி இருக்கையில் ட்ரம்பின் பேச்சுக்கு மட்டும் மோடி பதிலளித்துவிடுவாரா என்ன? எனவே காத்திருங்கள். அமித்ஷாவே இதற்கு புதிய நாடகத்துடன் வந்து பதிலளிப்பார்” என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில், காஷ்மீர் விவகாரம் குறித்த ட்ரம்பின் பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி இதுகாறும் பதிலளிக்காததை அடுத்து ட்விட்டரில் #BolModiBol என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.