உத்தர பிரதேச மாநிலம் பரேலி தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜேஷ் மிஸ்ரா. ஆதிக்க சாதியை சார்ந்த ராஜேஷ் மிஸ்ராவின் மகள் சாக்ஷி, அஜிதேஷ் என்ற தலித் இளைஞரை காதலித்து திருமணம் முடித்தார். பின்னர் ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து, தனது தந்தையிடமிருந்து பாதுகாப்புக் கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
தங்கள் உயிருக்கு தந்தை, சகோதரன் மற்றும் அவருடைய நண்பர்களால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வீடியோவையும் சாக்ஷி வெளியிட்டார். மேலும், அலகாபாத் உயர்நீதிமன்றத்திலும் அவர் மனு செய்துள்ளார். அதில், ‘எங்கள் உயிருக்கு என் தந்தை மற்றும் சகோதரனால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்துகொண்ட எங்களை, அமைதியாக வாழ பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.
அதே நேரம், ராஜேஷ் மிஸ்ரா அளித்த பேட்டியில், ‘எனது மகள் மேஜர் என்பதால், அவர் சொந்தமாக முடிவெடுக்க உரிமை உள்ளது. அவருக்கு நானோ, எனது குடும்பத்தினரோ எந்த மிரட்டலும் விடுக்கவில்லை,’’ என்றார்.
இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதற்காகக் காலை 8 மணிக்குத் தம்பதி நீதிமன்றத்துக்கு வந்துள்ளனர். சரியாக 8.30 மணிக்கு காரில் வந்த சிலர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி சாக்ஷி மற்றும் அவரின் கணவரைக் கடத்திச் சென்றுள்ளனர். நீதிமன்ற வாசலிலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், இதுகுறித்து நீதிமன்றத்தில் சாட்சி கூறியுள்ளார்கள். அப்போது அவர்கள், "அவர்கள் இருவரும், நீதிமன்றத்தின் மூன்றாவது வாசல் அருகில் நின்றுக்கொண்டிந்தார்கள். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் ஒரு கருப்பு காரில் வந்தவர்கள் அவர்களை துப்பாக்கி காட்டி மிரட்டி காரில் கடத்தி சென்றார்கள்” எனத் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் ஆராயப்பட்டு வருவதாக காவலர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தனது விருப்பப்படி திருமணம் செய்துகொண்ட மகளுக்கு எதிராக, ஆணவப் படுகொலை செய்யத் துடிக்கும் பா.ஜ.க எம்.எல்.ஏ-வுக்கு இந்தக் கடத்தல் சம்பவத்தில் இருக்கும் தொடர்பு குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளவேண்டும் என சமூக வலைதளத்தில் கோரிக்கை எழுந்துள்ளது.