மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பல்வேறு அரசியல் பிரச்னைகளுக்கு எதிராக போராட்டத்தை முன்னின்று நடத்துபவர். சமீபத்தில் கூட சூழலியல் போராளி முகிலன் காணாமல் போனதாக காவல்துறை கண்டுபிடிக்க தவறுகிறது, அவர் காணாமல் போனதில் சந்தேகம் உள்ளது என தொடர்ச்சியான கண்டனக்குரல் மற்றும் போராட்டங்களை நடத்திவந்தவர்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் காவிரி விவகாரம், ஈழத் தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி, ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு என தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தார்.
இதனிடையே இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், தொடர்ந்து ஒரு சாதிக்கு எதிராகவும், தேவையில்லாத கருத்துகளை திணித்ததாகவும் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்கள் மீது அவதூறு பரப்பும் விதமாக பேசியதாகவும் திருமுருகன்காந்தி மீது வழக்குகள் தொடரப்பட்டன. சென்னை திருவல்லிக்கேணி, வள்ளுவர் கோட்டம் ஆகிய காவல் நிலையங்களில் திருமுருகன் காந்தி மீது 8 வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில் அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி திருமுருகன்காந்தி சார்பில் தனித்தனியே 8 மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் மீதான விசாரணை ஜூலை 9ம் தேதி நடைபெற்றது. அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், திருமுருகன் காந்தி பதிவு செய்த அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தார்.
மேலும் வழக்கு குறித்து பேசிய நீதிபதி, “அவருடைய பேச்சுகளையும் நடவடிக்கைகளையும் பார்க்கும்போது அவர் மீது காவல் துறை வழக்கு தொடர அனைத்து முகாந்திரமும் இருக்கிறது. அவர் பின்னால் இருந்து யாரேனும் இயக்குகிறார்களா?” என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளவேண்டும்” எனத் தெரிவித்தார்.
நீதிபதியின் இந்த கேள்வி திருமுருகன் காந்தியின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் நீதிபதியின் இந்த கருத்து குறித்து திருமுருகன் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, “என் பின்னணியில் என் மகளைத் தவிர வேறு யார் இருப்பார்கள்? அவளின் உலகம் களவாடப்படுவதை என்னைத் தவிர வேறு யார் தடுப்பார்கள்? அவளின் நீர், நிலம், ஆறு, கடல், காற்றும் கார்ப்பரேட்டுக்கு விற்கப்பட்டு மாசுபடுவதை அப்பாவாக நான்தானே எதிர்க்க வேண்டும். அவள், அவளுடைய தலைமுறையின் உரிமைக்கான முகமே நான்..” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதியின் இந்த கேள்வி சமூக வலைத்தளங்களி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் குழந்தைகளுக்காகப் போராடி வரும், திருமுருகன் காந்தியை பின் இருந்து இயக்குவது இந்த சமூகத்தின் மீது அக்கறைகொண்ட நாங்கள் தான்..” என்று பலரும் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர்.