கர்நாடகாவில் மொத்தமுள்ள 225 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த ஆண்டு மே 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மும்முனை போட்டி நிலவிய களத்தில் அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி 79 இடங்களே வென்றிருந்தது. எதிர்க்கட்சியாக இருந்த எடியூரப்பாவின் பா.ஜ.க 105 இடங்களை வென்றது. மதசார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களை வென்றது.
ஆட்சியமைக்க 113 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலை இருந்ததால், கர்நாடகாவில் எந்தக் கட்சியும் பெரும்பான்மையை பெறவில்லை. அதனால், ஆளுங்கட்சியான காங்கிரஸ் குமாரசாமியுடன் ம.ஜ.த.,வுடன் கூட்டணி அமைத்தது. இறுதியில், 2 சுயேட்சை எம்.எல்.ஏக்களும், 1 பகுஜன் சமாஜ் உறுப்பினர்கள் காங்கிரஸ், ம.ஜ.த.,வுடன் இணைந்தனர். பின்னர் முதலமைச்சராக ம.ஜ.த.,வின் குமாரசாமியும், துணைமுதலமைச்சராக காங்கிரஸின் பரமேஸ்வராவும் பதவியேற்றனர்.
பதவியேற்பில் இருந்த குளறுபடிகள் காரணமாக தனிப்பெரும்பான்மை பெற்றிருந்த பா.ஜ.க எடியூரப்பா தலைமையில், எப்படியாவது ஆட்சி அமைத்துவிட வேண்டும் என்று பல்வேறு வழிகளில் முயற்சி செய்தது.
தங்களால் ஆட்சியமைக்க முடியவில்லை என்ற காழ்ப்புணர்ச்சியுடன் இருந்த பாரதிய ஜனதா கட்சி, எப்படியாவது கர்நாடக அரசை கவிழ்த்துவிட வேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்து வந்தது. சரியான நேரத்திற்காக காத்துக் கொண்டிருந்தது.
அந்த வேளையில், காங்கிரஸ், ம.ஜ.த உறுப்பினர்களுக்கு இடையே அதிருப்தி ஏற்பட்டதாக பேசப்பட்டு வந்த நிலையில் அதற்கு சித்தராமையாவும், குமாரசாமியும் பரஸ்பரமாக மறுப்பு தெரிவித்து வந்தனர். இருந்தாலும் கட்சியினரிடையே அவ்வப்போது முரண்பாடுகள் நிலவி வந்தது.
இவ்வளவு பிரச்னைகள் இருந்தும் சித்தாரமையாவும் சரி, குமாரசாமியும் சரி இது எதையும் கண்டுகொள்ளாமல் இருந்ததால் இதனை பா.ஜ.க அல்வா போன்று பயன்படுத்த தொடங்கிவிட்டது. குறிப்பாக ஆட்சி அதிகாரத்தில் திரைமறைவாக நடந்து வந்த இந்த சிக்கல்கள் எதையுமே முதல்வர் குமாரசாமி சரிவர கையாளவில்லை.
இதனை அறிந்து கொஞ்சம் கொஞ்சமாக காய்நகர்த்த தொடங்கிய எடியூரப்பாவின் குதிரை பேரம் வேலை செய்ய ஆரம்பிக்க, முதலில் காங்கிரஸில் உள்ள ரமேஷ் ஜர்கி ஹோலி என்பவர் கூட்டணியில் திருப்தி இல்லை என்று சாக்குபோக்கு சொல்லி தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் வஜூபாய் வாலாவிடம் அளித்தார்.
அவரைத் தொடர்ந்து அன்றைய பிற்பகலிலேயே காங்கிரஸின் மற்றொரு எம்.எல்.ஏ. ஆனந்த் சிங் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
இதனால் கர்நாடக அரசியலில் குழப்பத்தீ மூண்ட நிலையில் அடுத்தடுத்து ம.ஜ.த.,வின் 3 எம்.எல்.ஏ.,களும், காங்கிரஸின் சபாநாயகர் ரமேஷ் குமார் உட்பட 8 எம்.எல்.ஏ.,களும் ராஜினாமா கடிதத்தை வழங்க அரசியல் களம் காட்டுத்தீ போன்று பரவத் தொடங்கியது.
இதற்கிடையில், காங்கிரஸ், ம.ஜ.தா கூட்டணியில் உள்ள உறுப்பினர்களின் அமைச்சரவை கனவை அறிந்த பா.ஜ.க ஆள் பிடிக்கும் ஆபரேஷன் கமலாவை தொடங்க, ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்த சுயேட்சை எம்.எல்.ஏ. நாகேஷும் ராஜினாமா செய்தார்.
இதுகாறும் காங்கிரஸ் அமைச்சர்கள் 21 பேர் ஆட்சிக்கு அளித்த ஆதரவை விலக்கிக்கொண்டு ராஜினாமா செய்துள்ளதாக சித்தராமையாவே தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து விழும் பேரடிகளால் ஆட்டம் கண்டுள்ளது கர்நாடக ஆளுங்கட்சி. எனவே கர்நாடக சட்டமன்றத்தின் வலிமை 212 ஆக குறைந்ததோடு ஆளுங்கட்சியின் பலமும் 104ஆக குறைந்துள்ளது.
எனவே பிரதான எதிர்க்கட்சியாக உள்ள பா.ஜ.கவுக்கு 105 உறுப்பினர்கள் உள்ளது. ஆட்சி அமைப்பதற்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்களை இழுத்தால் கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதால் ஆளுங்கட்சியினர் கைவசம் உள்ள உறுப்பினர்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக குடகு மாவட்டத்தில் உள்ள ரிசார்ட்டுக்கு படையெடுக்க வைத்துள்ளனர்.
இதேபோல், கடந்த 2008ம் ஆண்டு ஆட்சியை பிடிப்பதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தன் வசம் இழுத்தே முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா. அதே ஃபார்முலாவைதான் தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கும் எடியூரப்பா பயன்படுத்தி வருகிறார்.
கர்நாடக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த குளறுபடிகள் தேசிய ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நாடு முழுவதும் காங்கிரஸ் பலவீனமடைந்து வரும் நிலையில், தென் இந்தியாவில் காலூன்ற பா.ஜ.க தீவிரமாக முயற்சித்து வருகிறது.
கடந்த ஒரு வாரமாக இந்த பிரச்னை நடந்து வரும் நிலையில், முதல்வர் குமாரசாமி தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பெங்களுரூ திரும்பியுள்ளார். அவரது அலட்சியமே இந்த பிரச்னைக்குக் காரணம் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.