கடந்த 6 மாதத்திற்கு முன்பு மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் தற்போது வரை மருத்துவமனை அமைப்பதற்கான திட்ட அறிக்கை கூடத் தயார் செய்யவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் ஆரம்பம் முதல் பெரும் பிரச்னையே நிகழ்ந்து வருகிறது. அண்மையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒதுக்கப்பட்ட 224.42 ஏக்கர் நிலம் தமிழக அரசால் மத்திய சுகாதாரத்துறை வசம் ஒப்படைக்கப்படவில்லை என்ற தகவல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளிவந்தது. இதையடுத்தே, மாவட்ட நிர்வாகம், நிலம் அளவீடு செய்து 224.42 ஏக்கர் நிலத்தை மத்திய சுகாதாரத்துறைக்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
முன்னதாக பிரதமர் மோடி மதுரைக்கு வந்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டியது தென் மாவட்ட மக்கள் மத்தியில் இந்த முறை நிச்சயம் மதுரையில் ‘எய்ம்ஸ்’ வந்துவிடும் என எண்ணவைத்தது. ஆனால் மாநில அரசு இதற்கு போதிய ஆர்வம் காட்டவில்லை என குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.
இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஹக்கீம் என்பவர், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான திட்ட அறிக்கை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பினார்.
அதில், தற்போது வரை ‘எய்ம்ஸ்’ மரு்ததுவமனைக்கான திட்ட அறிக்கையைத் தயார் செய்யவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்துள்ளது. இந்தச் செய்தி மதுரை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் ரஹிம் பேசியதாவது, "224 ஏக்கரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் எத்தனை தளங்கள் அமைக்கப்படுகின்றன; என்னென்ன சிகிச்சை அரங்குகள் இடம்பெறுகிறது என்பது உள்ளிட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதா? என்றும், இருந்தால் அதன் நகலையும் ஆர்.டி.ஐ மூலம் கேட்டிருந்தேன். ஆனால், மத்திய சுகாதாரத் துறை இன்னும் விரிவான திட்ட அறிக்கை தயாராகவில்லை என்று பதில் அளித்துள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், இதன் மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி 6 மாதங்களைக் கடந்தும் இன்னும் திட்ட அறிக்கைகூட தயார் செய்யாமல் தொடக்கப் புள்ளியிலேயே பணி நிற்கிறது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய பணியில் இவ்வளவு தாமதம் என்பது அதிர்ச்சியை அளிக்கிறது.
மேலும், திட்ட அறிக்கை தயார் செய்து, நிதி ஒதுக்கீடு நடந்து, டெண்டர் விட்டு பணிகள் எப்போது தொடங்கும் என்பது மத்திய அரசுக்கு மட்டுமே வெளிச்சம். எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்துக்கானது எனக் கருதி விரைவில் திட்ட அறிக்கை தயார் செய்து, நிதி ஒதுக்கீடு பெற்று பணிகளைத் தொடங்க மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும்’’ என்று அவர் தெரிவித்தார்.