பா.ஜ.க மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து இந்துத்துவா வன்முறை கும்பல்களின் அராஜகம் அதிகரித்துள்ளது. சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் மீதான வன்முறையும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதை தடுக்க மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க எந்த வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அண்மையில், ஜார்கண்ட் மாநிலத்தில் இஸ்லாமிய இளைஞர் ஒருவர் மீது மதவாதக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்த இளைஞரிடம் 'ஜெய் ஸ்ரீராம்' என கூறச்சொல்லி ஏழு மணிநேரம் கட்டி வைத்து அடித்ததில் மயக்கமடைந்து அவர் உயிரிழந்தார்.
அதையடுத்து மேற்கு வங்கத்தில் முகமது சஹ்ருக் ஹல்தார் (26) என்ற இஸ்லாமிய மதபோதகரை, 'ஜெய் ஸ்ரீராம்' என கூறச் சொல்லி ரயிலில் இருந்து தூக்கி வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் கடந்த வாரம் 25-ம் தேதி மும்பை தானா பகுதியில் “ஜெய் ஸ்ரீ ராம்” சொல்லச் சொல்லி வாகன ஓட்டுநர் மீது இந்துத்வா கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. மதத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்ட இந்தக் கொடூரச் சம்பவங்களுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மதத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்ட இந்தக் கொடூரக் கொலை சம்பவத்தை இன்றைய தினம் நடைபெற்ற மக்களவையின் போது மத்திய சென்னை தொகுதி தி.மு.க வேட்பாளர் தயாநிதி மாறன் இதுகுறித்து பேசினார். அப்போது அவர், நாட்டில் முஸ்லீம் இளைஞர்கள் அடித்துக் கொலை செய்யப்படுவதாக மக்களவையில் தயாநிதி மாறன் குற்றச்சாட்டினார்.
இந்தியா முழுவதும் மதத்தின் பெயரால் கடவுளின் பெயரால் மனிதர்கள் கொலை செய்யப்படுவது குறித்து பேசியபோது சபாநாயகர் ஓம் பிர்லா உணவு இடைவேளைக்குச் செல்லுங்கள் என்று உத்தரவிட்டு அவையைக் கலைத்து விட்டார். இதனால் தமிழக எம்.பி-க்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
நாடுமுழுவதும் இந்துத்துவா கும்பலால் நடைபெறும் கொலைகள் குறித்து பேசுகையில் சபாநாயகர் உணவு இடைவேளை என புறப்பட்டுச் சென்றது ஜனநாயக விரோத செயல் சென்று எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.