17வது மக்களவை தேர்தலுக்கு பிறகு முதன்முறையாக கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்கியது. இதையடுத்து, நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றினார்.
குடியரசு தலைவர் உரையில் ஒன்றுமில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்நிலையில், குடியரசுத் தலைவர் உரை ஏமாற்றமளிக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான திருமாவளவன் அறிக்கை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில், ''இன்று குடியரசுத் தலைவர் நிகழ்த்திய உரை புதிய அறிவிப்புகள் ஏதும் இன்றி ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கூட்டுக்கூட்டத்தில் இன்று குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்தினார். புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் அரசு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு என்ன செய்யப் போகிறது என்பதை சுட்டிக் காட்டுவதாக குடியரசுத் தலைவர் உரை அமைவது வழக்கம். ஆனால், இன்றைய உரையில் எந்த ஒரு புதிய அறிவிப்பும் இல்லை. சில நாட்களுக்கு முன்னர் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைத் தெரிவிப்பதாகவே இந்த உரை அமைந்திருந்தது.
நாட்டின் முதன்மையான பிரச்சனையாக இருக்கும் வேலையின்மைப் பிரச்சினை குறித்தோ, விவசாயிகளின் கடன் சுமையைத் தீர்ப்பது குறித்தோ எந்த ஒரு அறிவிப்பும் இந்த உரையில் இல்லை. இந்த நாட்டின் சுமார் 25 விழுக்காடு மக்களாக இருக்கும் தலித் மற்றும் பழங்குடியினர் குறித்து இந்த உரையில் எதுவும் குறிப்பிடப்படாதது வேதனை அளிக்கிறது.
கேரளாவில் சமூகப் புரட்சியை முன்னெடுத்த திரு நாராயண குருவின் வார்த்தைகளை குடியரசுத்தலைவர் மேற்கோள் காட்டியிருந்தார். “சாதிய பாகுபாடும் மத அடிப்படையிலான வெறுப்பும் இல்லாமல்” அனைவரும் ஒற்றுமையாக வாழ்வதைப்பற்றி நாராயணகுரு கூறியிருந்ததை குடியரசுத் தலைவர் குறிப்பிட்டது வரவேற்கத்தக்கதுதான். என்றாலும் நாடெங்கும் அதிகரித்து வரும் சாதி மத வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த அரசு என்ன செய்யப் போகிறது என்பதை அவர் தெரிவிக்காதது இது வெற்றுரையாகவே உள்ளது என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்கள் கடுமையான வறட்சியை சந்தித்து வருகின்றன. குடிநீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஆனால் குடியரசுத்தலைவரோ குடிநீர்ப் பிரச்சனை வெற்றிகரமாகத் தீர்க்கப்பட்டுவிட்டதாகக் கூறியுள்ளார். சட்டவிரோதக் குடியேற்றங்கள் பற்றி அவர் பேசியிருக்கிறார்.கடந்தமுறையே குடியுரிமைச் சட்டத்தில் பா.ஜ.க அரசு மத அடிப்படையில் திருத்தம் கொண்டுவர முயற்சித்தது. காலாவதியாகிப்போன அந்த மசோதாவை மீண்டும் அவர்கள் கொண்டு வரப்போகிறார்கள் என்பதையே அது அடையாளம்காட்டுகிறது.
கடந்த 2018ம் ஆண்டு அவர் ஆற்றிய உரையிலும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதைப் பற்றி அவர் வலியுறுத்தியிருந்தார். மீண்டும் அதை இந்த ஆண்டும் குடியரசுத்தலைவர் உரையில் அது இடம்பெற்றிருப்பது இந்திய அரசியல் ஜனநாயகத்தை அழித்தொழிக்க இந்த அரசு திட்டமிடுகிறதோ என்ற அச்சத்தை அதிகரிக்கச்செய்கிறது. ஒட்டுமொத்தத்தில் குடியரசுத் தலைவர் உரை நாட்டு மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக அமைய வில்லை, ஏமாற்றமே அளிக்கிறது " இவ்வாறுக் கூறப்பட்டுள்ளது.