நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் இன்று மக்களவையில் பதவியேற்றுக் கொண்டனர். தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவியேற்றனர். பின்னர் தெலுங்கானா எம்.பி.க்களும் பதவியேற்றனர். அப்போது ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவரும் ஐதராபாத் எம்.பி.,யுமான அசாதுதீன் ஒவைசி பதவியேற்க வந்தார்.
அப்போது பா.ஜ.க.வினர் அனைவரும் ஒன்றுசேர்ந்து “ஜெய் ஸ்ரீ ராம்.. பாரத் மாதா கி ஜே” என்று கத்தினர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஒவைசி பதவியேற்கும் போது “ஜெய் பீம் - ஜெய் மீம்.. அல்லாஹு அக்பர்.. ஜெய்ஹிந்த்” என கூறினார்.
மேலும் பேசிய அவர், என்னைப் பார்க்கும்போது இதுபோன்ற விஷயங்களை அவர்கள் நினைவில் வைத்திருப்பது நல்லது என்றும், அரசியலமைப்பு மற்றும் முசாபர்பூரில் குழந்தைகளின் இறப்புகளையும் அவர்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என்றும் நம்புகிறேன் என்று குறிப்பிட்டார்.
பெரும்பான்மையான இந்துக்கள் கூடியிருக்கும் நாடாளுமன்றத்தில் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த உறுப்பினரை அச்சுறுத்தும் வகையில் பா.ஜ.க உறுப்பினர்கள் செயல்பட்டதற்கு பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
பா.ஜ.க-வின் கூச்சல்களுக்கு சிறிதும் மதிப்பளிக்காமல் பதவியேற்ற அசாதுதீன் ஒவைசி, சமூகநீதியின் குரலாக ‘ஜெய் பீம்’ என முழங்கியதை பலரும் வரவேற்றுள்ளனர்.