அரசியல், படித்தவர்களுக்கான இடம் அல்ல என்ற ஒரு பொய்யான கருத்து. இங்கு காலம் காலமாக பரப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் கற்றறிந்தவர்களும் கலைஞர்களும் எழுத்தாளர்களும் அரசியல் அதிகாரத்திற்கு வரும்போது, அவர்கள் மக்கள் பிரதிநிதியாக உயரும்போதுதான் மகத்தான மாற்றங்கள் நிகழ்கின்றன என்பது உலக வரலாறு. அந்தவகையில் சிந்தனையாளர்களையும்
கலைஞர்களையும் எழுத்தாளர்களைம் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் அனுப்பிய முதன்மையான மாநிலம் தமிழகம் எனலாம். அதற்கு மிகச் சிறந்த உதாரணங்கள் அறிஞர் அண்ணாவும் கலைஞரும் ஆவார்கள்.
தலைசிறந்த பத்திரிகையாளரும் நாடாக ஆசிரியருமான அறிஞர் அண்ணா நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகள், மாநில உரிமைக்காக அவர் முன்மொழிந்த கோரிக்கைகள் இன்று இந்தியாவிற்கே வழிகாட்டும் அரசியல் ஆவணங்களாக இருக்கின்றன. அதேபோல கவிஞர், சிறுகதை ஆசிரியர், நாவல் ஆசிரியர், நாடக ஆசிரியர், சினிமா வசனகர்த்தா, பத்திரிகையாளர் என ஒரு எழுத்தாளனுக்குரிய சகல பரிணாமங்களும் உடைய தலைவர் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகளும் தன்னுடைய
கொள்கைகளாலும் சிந்தனைகளாலும் இந்த மாநிலத்தின் தலை எழுத்தையே மாற்றி எழுதியதும் கடந்த அரைநூற்றாண்டு கால தமிழக வரலாறு.
இந்தப் பாதையில் இன்று திராவிட இயக்கம் தனது அடுத்த அடியை எடுத்து வைத்திருக்கிறது. இந்தியாவிலேயே கடந்த காலத்திலும் சரி நிகழ் காலத்திலும் சரி எந்த மாநிலத்திலும் நடந்திராத அளவில் ஐந்து எழுத்தாளர்கள் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளிடமிருந்து ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் செல்கிறார்கள். இதை ஒரு சரித்திர நிகழ்வென்றே சொல்லலாம். இதைச் சாதித்தவர் தி.மு.க தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவார்ந்த தலைமை. எழுத்தாளர்கள் ஆட்சி மன்றத்தில் அமரும்போது அவர்கள் சமூக உரிமைகளுக்காகவும், பண்பாட்டு உரிமைகளுக்காகவும், மொழி உரிமைகளுக்காகவும் அழுத்தமாகவும் ஆழமாகவும் குரல் எழுப்புவார்கள். அதற்கு நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல அண்ணாவும் கலைஞருமே சாட்சி. இன்று தமிழகத்திலிருந்து செல்லும் இந்த படைப்பாளர்களின் குரல்கள் இந்தியா முழுக்க எதிரொலிக்கப் போவதில் எந்த ஐய்யமும் இல்லை.
கனிமொழி கருணாநிதி
இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராக செயல்பட்டு தமிழகத்தின் கொந்தளிக்கும் பிரச்னைக்காக, நமக்கு மறுக்கப்படும் உரிமைகளுக்காக திராவிடத்தின் குரலை நாடாளுமன்றத்தில் பலமுறை உரத்து ஒலித்திருக்கிறார் கனிமொழி. இப்போது தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மக்களவைக்குச் செல்கிறார்.
தமிழின் மிக முக்கியமான நவீன கவிஞர்களில் ஒருவராகத் திகழும் கனிமொழி, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் தொடக்க காலத்தில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். பிறகு, சிங்கப்பூரில் தமிழ் முரசு இதழிலும் பத்திரிகையாளராக பணியாற்றிய கனிமொழி 2007ஆம் ஆண்டு ‘சென்னை சங்கமம்’ என்ற மாபெரும் கலை பண்பாட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார். இவருடைய கருவறை வாசனை, அகத்திணை, பார்வைகள், கருக்கும் மருதாணி ஆகிய நூல்கள் நவீன தமிழ் இலக்கியச் சூழலில் பெரிதும் கவனம் பெற்றவை. இவருடைய குரல் ஒட்டுமொத்த தமிழ்க் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிக்கப்போவதில் சந்தேகம் இல்லை.
தமிழச்சி தங்கபாண்டியன்
தி.மு.க-விலிருந்து நாடாளுமன்றத்திற்கு முதன்முதலாக
தேர்தெடுக்கப்பட்டிருக்கும் மற்றொரு எழுத்தாளர் தமிழச்சி தங்கபாண்டியன். கல்வியாளர், கவிஞர், இலக்கிய விமர்சகர், அரங்கியல் கலைஞர் என பன்முக ஆளுமை கொண்ட தமிழச்சி தங்கபாண்டியன் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கை புலம்பெயர் ஆங்கில படைப்பிலக்கிய வெளிப்பாடுகள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள தமிழச்சி தங்கபாண்டியன் தமிழகத்தின் முன்னாள் வணிகவரிதுறை அமைச்சர் வி.தங்கபாண்டியனின் மகள். ஆங்கில கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றிய இவர் முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
திராவிட முன்னேற்ற கழக இயக்கப் பணிகளுக்காக தனது கல்லூரி பேராசிரியர் பணியை உதறி முழுமையாக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட இவர் தமிழ்நாடு முழுக்க பயணம் செய்து
திராவிட இயக்க கொள்கைகளைப் பரப்பி வந்திருக்கிறார். திரைப்படத்திலும் பாடல்கள் எழுதியுள்ளார். இவரது கவிதைத் தொகுப்புகளான, எஞ்சோட்டு பெண், வனப்பேச்சி, மஞ்சணத்தி, அருகன், அவளுக்கு வெயில் என்று பெயர் ஆகியவை பெரிதும் கவனம் பெற்றவை. மேலும் பாம்படம், சொல் தொடும் தூரம், பூனைகள் சொர்க்கத்திற்குச் செல்வதில்லை உள்ளிட்ட பல கட்டுரை நூல்களையும் முட்டுவீடு என்கிற சிறுகதை தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார். இவரது குரல் நாடாளுமன்றத்தில் தமிழ்ப் பண்பாட்டின் குரலாக எதிரொலிக்கும் என்பதில் ஐய்யம் இல்லை.
சு.வெங்கடேசன்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் பொதுவுடமை கட்சியின் சார்பாக மதுரையிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டிருப்பவர், எழுத்தாளர் சு.வெங்கடேசன். கல்லூரியில் படிக்கும்போதே 1989-ல் ஓட்டை இல்லாத புல்லாங்குழல் என்ற கவிதை தொகுப்பை வெளியிட்டு தன் எழுத்து வாழ்க்கையைத் தொடங்கிய சு.வெங்கடேசன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மேடையில் கவிஞராக அறிமுகமாகி பிறகு மாநிலத் தலைவராகவும் உயர்ந்தார். உத்தப்புரம் சாதி தடுப்பு சுவர் உள்ளிட்ட பல்வேறு மக்கள் போராட்டங்களில் நேரடியாக பங்கேற்றுள்ளார். கலாச்சாரத்தின் அரசியல், மனிதர்கள் நாடுகள் உலகங்கள், சமயம் கடந்த தமிழ், காவல்கோட்டம், சந்திரஹாசம், வைகை நதி நாகரிகம் என தமிழ் பண்பாட்டின் பல்வேறு பரிணாமங்களை காட்டும் படைப்புகளை ஆக்கி அளித்திருக்கிறார். இவருக்கு பெரும்புகழ் தேடித்தந்த படைப்பு ஆனந்த விகடனில் தொடராக வந்த ‘வேள்பாரி’.
காவல்கோட்டம் நாவலுக்காக சு.வெங்கடேசன் மிக இளம்வயதிலேயே சாகித்திய அகாடமி விருதைப் பெற்றார். கீழடியில் செய்யப்பட்ட தொல்லியியல் ஆய்வுகளை மத்திய அரசு மூடி மறைக்க முயற்சித்த போது கீழடி ஆய்வு வெளிபடுத்தும் தமிழரின் தொன்மையான நாகரிகம் குறித்த உண்மைகளை ஆய்வுரீதியாக தன் எழுத்துகளாலும் பேச்சுகளாலும் தொடர்ச்சியாக பரப்புரை செய்து அதை மக்களிடம் நிறுவிய பெரும் பங்கு சு.வெங்கடேசனுடையது. அவர் நாடாளுமன்றத்திற்கு செல்வது ஒடுக்கப்படும் மக்களின் உரிமைக்குரலை எதிரொலிக்கவும் மறைக்கப்படும் தமிழர் பண்பாட்டை வெளிச்சத்திற்குக் கொண்டுவரவும் உதவும் என்பதில் எவ்வித ஐய்யமும் இல்லை.
து.ரவிக்குமார்
தமிழின் முதன்மையான தலித் சிந்தனையாளராகவும் பின்நவீனத்துவ கோட்பாட்டாளராகவும் கருதப்படும் து.ரவிக்குமார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொது செயலாளர் ஆவார். இப்போது தி.மு.க கூட்டணியிலிருந்து உதயசூரியன் சின்னத்தில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நாடாளுமன்றம் செல்கிறார். 2006-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்ட இவர், தமிழகத்தின் மிகமுக்கியமான பிரச்னைகள் குறித்து சட்டசபையில் கேள்விகளை எழுப்பினார். அவர் எழுப்பிய பல முக்கியமான கோரிக்கைகளை கலைஞர் தலைமையிலான அன்றைய தி.மு.க அரசு நிறைவேற்றித் தந்தது.
தொடர்ந்து ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துவரும் ரவிக்குமாரின் கண்காணிப்பின் அரசியல் கொதிப்பு உயர்ந்துவரும், வன்முறை ஜனநாயகம், தமிழராய் உணரும் தருணம், அண்டைய அயல் உலகம், கற்றணைத்தூறும் முதலான நூல்கள் பெரிதும் கவனம் பெற்றவை, அவிழும் சொற்கள், மலைமரம் ஆகிய கவிதை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். ஃபூகோ, எர்வெர்ட் சய்யத், அம்பெர்த்தோ ஈகோ, மகாஸ்வேதாதேவி, இஸ்மத் சுக்காய், இஸபெல் ஹாலண்ட், கேப்ரியல் கார்ஸியா மார்கியூஸ் உள்ளிட்ட சிந்தையாளர்களின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
அயோத்திதாச பண்டிதரின் சிந்தனைகளை நான்கு தொகுதிகளாக வெளியிட்டுள்ள இவர், நிறப்பிறகை, தலித், போதி, மணற்கேணி ஆகிய இதழ்களை நடத்தியிருக்கிறார். ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காக இவரது குரல் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஜோதிமணி சென்னிமலை
திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக கரூர் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்குச் செல்லும் மற்றொரு நவீன எழுத்தாளர் ஜோதிமணி. 22 வயதிலேயே அரசியலில் நுழைந்த ஜோதிமணி, இளைஞர் காங்கிரஸில் தீவிரமாக செயல்பட்டு இந்திய
இளைஞர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக 2009 முதல் 2012 வரை பணியாற்றினார். சித்திரக்கூடு என்ற நாவலை எழுதியிருக்கும் ஜோதிமணி ஒற்றை வாசனை, நீர் பிறக்கும் முன் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார். இளைஞர் காங்கிரஸ் சார்பில் பல்வேறு சர்வதேச மாநாடுகளில் பங்கேற்றிருக்கும் இவர், சிறந்த பேச்சாளராக மக்கள் பிரச்னைகளை முன்வைத்து வந்திருக்கிறார், பல்வேறு போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார்.
தமிழகத்தில் இருந்து செல்லும் இந்த படைப்பாளிகளின் ஐவர் அணி எல்லா இடத்திலும் திராவிடத்தின் கூட்டுக்குரலாகவும் தமிழகத்தின் எழுச்சி குரலாகவும் ஜனநாயகத்தின் உரிமைக்குரலாகவும் ஒலிக்கப்போகிறது. அந்தவகையில் தமிழகத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி எழுத்தாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் என ஒரு எழுச்சிமிகு இளம் அறிவார்ந்த படையையே நாடாளுமன்றத்திற்கு அனுப்புகிறது. இது இந்திய நாடாளுமன்ற வரலாற்றின் அழுத்தமான தடங்களை பதிக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
- செலினா ஹஸ்மா