உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவாரில் பேசிய பாபா ராம்தேவ் மக்கள் தொகையை கட்டுப்படுத்த 2குழந்தைகள் மேல் பெற்றுக்கொள்ளக்கூடாது. அடுத்த 50 ஆண்டுகளில் இந்திய நாட்டின் மக்கள் தொகை 150 கோடியை தொட்டுவிடும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், ஒரு குடும்பத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால், மூன்றாவதாக பிறக்கும் குழந்தைகளுக்கான சலுகைகளை அரசு ரத்து செய்யவேண்டும். குறிப்பாக தேர்தலில் வாக்கு உரிமை மற்றும் போட்டியிடும் உரிமைகள் போன்றவற்றை ரத்து செய்யவேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே டிவிட்டர் பக்கத்தில் பாபா ராம்தேவின் கருத்துக்கு ஐதராபாத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவருமான அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, “ஜனநாயகத்திற்கு விரோதமாக மோசமான கருத்துக்களை பேசுவதற்கு தடை சட்டம் எதுவும் இல்லை. ஆனால், பாபா ராம்தேவின் இந்த மோசமான கருத்து முக்கியத்துவத்தை பெறப்போகிறதா? என கேள்வியெழுப்பினார்.
மேலும் பாபா ராம்தேவ் எளிதாக வயிறை வைத்தோ, காலை வைத்தோ யோக வித்தையைக் காட்டலாம் . ஆனால், சட்டம் இயற்றுவது என்பது யோகா செய்து காட்டுவது போல் எளிதானது அல்ல. ஒருவேளை அவ்வாறு சட்டம் இயற்றப்பட்டால், தற்போது புதிதாக பிரதமர் பதவி ஏற்றிருக்கும் மோடியும் பதவியில் இருந்து இறக்கப்படுவர். ஏனெனில், அவரும் 3வது குழந்தை தானே என்று கிண்டலாக ட்விட்டர் பக்கத்தில் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் செய்தியார்களை சந்தித்து அசாதுதீன் ஒவைசி பேசுகையில், நாட்டின் பிரதமராக மோடி மீண்டும் பொறுப்பேற்றதும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் தொடங்கிவிட்டது. வார்த்தை அளவில் மட்டுமே சிறுபான்மை மக்களுக்கு உதவுவதாக பேசியிருக்கிறார் என சாடியுள்ளார்.
மேலும், நாட்டின் பசு பாதுகாவலர் என்ற பெயரில் வன்முறையின் ஈடுபடும் கும்பல்கள் மீது நடவடிக்கை இல்லை, அவர்களை தடுக்க முயற்சி செய்யாதபோது அவர்களுக்கும் அச்சம் விலகி மேலும் கொலை செய்யும் அளவிற்கு துணிந்து விட்டார்கள். பா.ஜ.க வெற்றி பெற்றதன் மூலம் அவர்களின் கரம் வலுவடைந்துள்ளது என்பது குறிப்பிடவேண்டிய விஷயம் என அவர் தெரிவித்துள்ளார்.