அரசியல்

டெபாசிட் இழந்த தேமுதிக ; மாநில கட்சி அந்தஸ்தை இழக்கிறது!

கடந்த இரண்டு தேர்தல்களில் மூன்று சதவீதத்துக்கும் குறைவான ஓட்டுகளையே தே.மு.தி.க பெற்றுள்ளது. இதனால் தே.மு.தி.க.வுக்கு அதன் அங்கீகாரம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

டெபாசிட் இழந்த தேமுதிக ; மாநில கட்சி அந்தஸ்தை இழக்கிறது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மக்களவை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த தே.மு.தி.க. போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் மிகப்பெரும் தோல்வியை தழுவியது. அக்கட்சி சார்பில் வடசென்னை தொகுதியில் போட்டியிட்ட மோகன்ராஜ் மற்றும் திருச்சியில் போட்டியிட்ட இளங்கோவன் ஆகியோர் டெபாசிட் இழந்துள்ளனர். தே.மு.தி.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாதது அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2011 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.மு.க. 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் சில மாதங்களிலேயே அ.தி.மு.க.வுடன் ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக கூட்டணியில் இருந்து விலகியது.

2014 மக்களவை தேர்தலில் பா.ஜனதா, பா.ம.க. கூட்டணியில் சேர்ந்து 14 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க. ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. 2016 சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து 104 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க. படுதோல்வியை சந்தித்தது. கட்சி தலைவர் விஜயகாந்தும் தோற்றுப் போனார். தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் போட்டியிட்ட நான்கு இடங்களிலும் தோல்வி என தொடர்ச்சியாக 3 தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

2009-ல் தே.மு.தி.க.வின் வாக்கு சதவீதம் 10.1 ஆக இருந்தது. தற்போது 2.19 சதவீதமாக சரிந்துவிட்டது. ஆனால் தொடர்ந்து 2 தேர்தல்களில் 3 சதவீதத்துக்கும் குறைவான ஓட்டுகள் பெற்றிருக்கும் தே.மு.தி.க.வுக்கு, அதன் அங்கீகாரம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாநில கட்சிக்கான அங்கீகாரம் பெறுவதற்கு மாநிலத்தில் பதிவான வாக்குகளில் 6 சதவீத ஓட்டுகளை பெற வேண்டும். ஒரு பாராளுமன்ற தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும், அல்லது 6 சதவீத வாக்குகளையும் அல்லது 2 சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஒட்டு மொத்த சட்டசபை உறுப்பினர் இடங்களில் 3 சதவீத உறுப்பினர்களை கொண்ட கட்சியாக இருக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி ஆகும். இதனால் வரும் தேர்தலில் அக்கட்சிக்கு முரசு சின்னம் கிடைக்க வாய்ப்பு இல்லை.

banner

Related Stories

Related Stories